Published : 16 Apr 2020 01:42 PM
Last Updated : 16 Apr 2020 01:42 PM

தமிழகத்தில் 22 மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட்களாக அறிவிப்பு: 20-ம் தேதி தளர்வு விதிகள் இங்கு கிடையாது

தமிழகத்தில் 22 மாவட்டங்களை ஹாட் ஸ்பாட் மாவட்டங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 20-ம் தேதிக்குப் பின் தளர்த்தப்படும் விதிகள் இம்மாவட்டங்களுக்குப் பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று உள்ளவர்கள் 15 பேருக்கு மேல் உள்ள மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட் மாவட்டங்களாக அறிவிக்கப்படுகின்றன. அதன் அடிப்படையில் இந்தியா முழுவதும் 170 மாவட்டங்களை ஹாட் ஸ்பாட் மாவட்டங்களாக மத்திய அரசு இனங்கண்டுள்ளது. அதில் தமிழகத்தில் 22 மாவட்டங்கள் ஹாட்ஸ் ஸ்பாட் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

மூன்று வகையாக மாவட்டங்கள் பிரிக்கப்படுகின்றன. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறைச் செயலர் பிரீத்தி சுதன், அனைத்து மாநிலங்களுக்கும் எழுதிய கடிதத்தில் கீழ்கண்ட விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கரோனா நோய் பாதிக்கப்பட்டுள்ள எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து மாவட்டங்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்கள் (HOT SPOT), மிதமான பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்கள் ( NON HOT SPOT) மற்றும் பாதிப்புக்கு உள்ளாகாத மாவட்டங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளது.

அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் சிவப்பு மண்டலம் என்றும், மிதமான பாதிப்புக்கு உள்ளான ‘நான் ஹாட்ஸ்பாட்’ மாவட்டங்கள் வெள்ளை மண்டலம் என்றும், கரோனாவால் பாதிக்கப்படாத மாவட்டங்கள் பச்சை மண்டலம் என்றும் பிரிக்கப்பப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் சிவப்பு மண்டலத்தில் 170 மாவட்டங்கள் உள்ளன. வெள்ளை மண்டலத்தில் 207 மாவட்டங்கள் உள்ளன. பச்சை மண்டலத்தில் மீதமுள்ள மாவட்டங்கள் உள்ளன. தமிழகத்தில் இவ்வாறு பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் ஹாட் ஸ்பாட் எனப்படும் சிவப்பு மண்டலத்தில் 22 மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிவப்பு மண்டல மாவட்டத்தில் உள்ள 22 மாவட்டங்கள்:
1. சென்னை 2. ஈரோடு 3. கோவை 4. நெல்லை 5. திருச்சி , 6. வேலூர் 7. திண்டுக்கல் 8. விழுப்புரம் 9. திருப்பூர் 10. தேனி 11. நாமக்கல் 12. செங்கல்பட்டு 13. மதுரை 14. தூத்துக்குடி 15. கரூர் 16. விருதுநகர் 17. கன்னியாகுமரி 18 .கடலூர் 19. திருவள்ளூர் 20. திருவாரூர் 21. சேலம் 22. நாகை.

இதில் சென்னை முதலிடத்தில் உள்ளது.

மிதமான பாதிப்புக்குள்ளான வெள்ளை மண்டல மாவட்டங்கள் எண்ணிக்கை 9

1. தஞ்சை 2. திருவண்ணாமலை 3. காஞ்சிபுரம் 4. சிவகங்கை 5. நீலகிரி 6. கள்ளக்குறிச்சி 7. ராமநாதபுரம் 8. பெரம்பலூர் 9. அரியலூர்

கரோனா தொற்றே இல்லாத பச்சை மண்டல மாவட்டங்கள் எண்ணிக்கை 3

1. கிருஷ்ணகிரி, 2. தருமபுரி, 3 புதுக்கோட்டை

இப்போது அதிக பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்கள் என்று வகைப்படுத்தப்பட்ட மாவட்டங்களில் 14 நாட்கள் எந்த புதிய கரோனா தொற்றும் ஏற்படாவிட்டால் ஆரஞ்சு நிற மண்டலமாகவும், அடுத்த 14 நாட்களில் புதிதாகத் தொற்று ஏற்படாவிட்டால் பச்சை மண்டலமாகவும் மாற்றப்படும்.

அதிக பாதிப்புக்குள்ளான ‘ஹாட் ஸ்பாட்’ மண்டலத்தில் 28 நாட்கள் எந்த பாதிப்பும் இல்லை என்றால் அது பச்சை மண்டலத்துக்கு மாற்றப்பட்டுவிடும்.

20-ம் தேதி முதல் ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் இந்தத் தளர்வானது ஹாட் ஸ்பாட்டாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்குப் பொருந்தாது எனக் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x