Published : 16 Apr 2020 12:49 PM
Last Updated : 16 Apr 2020 12:49 PM
திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலையில் கூட்டம் தொடங்கியது.
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசின் நடவடிக்கையை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கும் முதல்வர் பழனிசாமிக்கும் அறிக்கைப் போர் நடந்து வருகிறது. இந்நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏப்.15 அன்று கூட்டுவதாக திமுக அறிவித்தது.
“கரோனா நோய்த் தொற்றில் மத்திய- மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏப்.15 (புதன்கிழமை) அன்று காலை 10 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் காணொலிக் காட்சி வழியே நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டார்.
''ஊரடங்கு நடைமுறையில் இருக்கின்ற நேரத்தில் கரோனா நோய்த் தொற்று குறித்து முதல்வர், அமைச்சர்களுடனும், அதிகாரிகளுடனும், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட துறை அதிகாரிகளுடனும் - ஏன், மருத்துவ நிபுணர்களுடனும், மதத் தலைவர்களுடனும் ஆலோசனைக் கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்டுள்ளன.
அந்த அடிப்படையில் கொடிய கரோனா நோய் குறித்து 15.4.2020 அன்று நடைபெறும் வகையில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு திமுக சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஆனால், திமுக அந்தக் கூட்டத்தை நடத்தக் கூடாது என்று காவல்துறை மூலம், அதிமுக அரசு நோட்டீஸ் கொடுக்க வைத்தது. தனிமனித இடைவெளி விட்டு, அரசின் பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு, கூட்டம் நடத்தப்படும் என்று மீண்டும் திமுக சார்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டும் - சென்னை மாநகர காவல்துறை, திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அனுமதி மறுத்திருக்கிறது.
கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அதிமுக அரசு பிடிவாதமாகச் செய்வது போல், ஜனநாயக நெறிகளுக்கு முரணான அரசியல் செய்ய, திமுக சிறிதும் விரும்பவில்லை. தமிழக மக்களின் நலன் சார்ந்த பிரச்சினை குறித்து , திமுக அனைத்துக் கட்சிக் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. ஏப்.16 (வியாழக்கிழமை) காலை 11 மணி அளவில் அன்று அனைத்துக் கட்சிகளின் இந்த ஆலோசனைக் கூட்டம், காணொலிக் காட்சி மூலம் நடைபெறும்” என ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று காலை 11 மணிக்கு அனைத்துத் தலைவர்களும் காணொலிக் காட்சியில் இணைந்தனர். திமுக தலைவர் ஸ்டாலின், வைகோ, கே.பாலகிருஷ்ணன், திருமாவளவன், முத்தரசன், கே.எஸ்.அழகிரி, வீரமணி உட்பட 11 கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். காணொலி மூலமாக இந்தக் கூட்டம் தொடங்கியுள்ளது.
தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு, மத்திய அரசின் 20-ம் தேதி தளர்வு அறிவிப்பு, பிரதமர் உரையில் புதிய அறிவிப்புகள் இல்லாதது, கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை, பொதுமக்களுக்கான நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT