Published : 15 Apr 2020 09:46 PM
Last Updated : 15 Apr 2020 09:46 PM

ஊரடங்கு நீட்டிப்பு: வாகன பாஸ் நிலை என்ன? - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

மே 3-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் அத்தியாவசிய தேவைக்காக வெளியில் செல்ல பயன்படுத்தும் அனுமதி அட்டை (பாஸ்) குறித்து ஆணையர் பிரகாஷ் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஊரடங்கு உத்தரவை ஒட்டி அத்தியாவசியப் பொருட்கள் , அத்தியாவசியத் தேவைகளுக்காகச் செல்பவர்கள் சென்னை மாநகராட்சியில் விண்ணப்பித்து அனுமதி அட்டை பெற்றுக்கொண்டனர். இந்நிலையில் மே 3-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் அனைவருக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

“அத்தியாவசிய சேவைகள் சார்ந்த நிறுவனங்களின் வாகனங்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி அட்டை 03.05.2020 வரை கால நீட்டிப்பு செய்யபட்டுள்ளதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி அத்தியாவசியத் தேவைகளுக்கான தொழிற்சாலைகள், மருந்தகங்கள், காய்கனி மற்றும் மளிகைக் கடைகளைத் தவிர்த்து பிற நிறுவனங்கள் அனைத்தும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் மார்ச் 23 நாளிட்ட அரசாணை எண்.152-ல் குறிப்பிட்டுள்ளவாறு பெருநகர சென்னை மாநகராட்சியால் அத்தியாவசிய சேவைகள் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு தடை உத்தரவு காலத்தில் செயல்படுவதற்கு ஏப்.15 வரை ஏற்கெனவே அனுமதி அட்டை வழங்கப்பட்டிருந்தது.

தற்பொழுது தடை உத்தரவு மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கெனவே பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்ட அனுமதி அட்டையினை மே 3 வரை பயன்படுத்தி கொள்ளலாம் என ஆணையர் பிரகாஷ், தெரிவித்துள்ளார்”.

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x