Published : 15 Apr 2020 07:25 PM
Last Updated : 15 Apr 2020 07:25 PM

நலவாரிய அட்டை இல்லாட்டியும் வயிறு இருக்குல்ல!- அரசின் நிவாரணம் கிடைக்காமல் அல்லாடும் மாற்றுத்திறனாளி ஆட்டோ ஓட்டுநர்

ஷாஜியை முதன்முதலில் சந்தித்த தருணம் மனதைவிட்டு இன்னும்கூட அகல மறுக்கிறது. ஆட்டோ ஓட்டுநர் ஷாஜி தவழ்ந்து செல்லும் மாற்றுத்திறனாளி. அவரது இரண்டு கால்களும் போலியோ பாதிப்புக்குள்ளாகி சிறுத்துப்போய் இருக்கின்றன. ஆனால், அதையெல்லாம் சாதாரணமாக ஒதுக்கித் தள்ளிவிட்டு மனம் நிரம்பத் தன்னம்பிக்கையோடு ஆட்டோ ஓட்டி வந்தார் ஷாஜி.

இந்த கரோனாவும், ஊரடங்கும் அவர் பிழைப்பையும் முடக்கிப் போட்டிருக்கிறது. நலவாரியத்தில் பதிவுசெய்திருக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அரசு நிவாரணத் தொகை வழங்கும் நிலையில், அப்படிப் பதியாத ஷாஜிக்கு அதுவும் இல்லை. இதுவரை தன்னம்பிக்கைச் சுடர் பிடித்து ஓடிவந்த ஷாஜி, ஊரடங்கால் பொருளாதாரம் இழந்து தவித்து வருகிறார்.

தவழ்ந்தே நடந்ததில் அவரது கால்கள், மற்றும் கைகளின் மூட்டுப் பகுதிகள் காய்த்துக் கிடக்கின்றன. ஆட்டோவின் கம்பிகளைப் பற்றிக் கொண்டு ஆட்டோவில் இருந்து அவர் இறங்கும்போதும், தவழ்ந்து வந்து கம்பிகளை பற்றிக் கொண்டு மடங்கியே இருக்கும் கால்களோடு அவர் தொங்கி ஏறி ஓட்டுநர் இருக்கையில் அமரும்போதும் நமக்குள்ளும் தன்னம்பிக்கை உரமேற்றுவார். ஆனால், அந்த உற்சாகம் இப்போது அவரிடம் இல்லை. குரல் கம்மிப்போய் தொடங்குகிறார் ஷாஜி.

“எனக்கு சொந்த ஊர் தூத்தூர். எங்க அப்பா கடலோடி. கடல் தொழிலுக்குப் போனா, வாரக்கணக்குல கடலுக்குள் தங்கி இருந்து மீன் பிடிப்பாங்க. நான் பிளஸ் 2 வரை படிச்சுருக்கேன். அதுக்கு மேல காலேஜுக்கு எல்லாம் இந்த காலோட போயிட்டு வர்றதே சவாலான விஷயம். அதனால மேல படிக்கல. அதேநேரம் தவழ்ந்துபோய், படகில் ஏறி கடல் தொழிலுக்குப் போறதும் சவாலான விஷயமா இருந்துச்சு. ஆனாலும் கையில் காசு இல்லாதப்போ அதுக்கும் போயிருக்கேன்.

நீண்ட யோசனைக்குப் பின்னாடி கடற்கரையில் இருந்து நாகர்கோவில் நகரத்துக்கு 17 வருசத்துக்கு முன்னாடி இடம்பெயர்ந்தேன். தொடக்கத்தில் ஒரு மரக்கடையில் டிசைனிங் வேலைக்கு போனேன். ஒரு நாளைக்கு 75 ரூபாய் சம்பளம். ஆனா, அதுவும் கட்டுப்படியாகல. அப்புறம்தான் ஆட்டோ ஓட்ட ஆரம்பிச்சேன்.

ஒருநாளு கலெக்டர் ஆபீஸுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகைக்கு மனு செய்யப் போனேன். அப்போ என்னை மாதிரியே மாற்றுத் திறனாளியான கீதாவும் உதவிகேட்டு மனு செய்ய வந்தாங்க. அப்போது ஏற்பட்ட நட்பில் காதலாகி இரண்டுபேரும் திருமணம் செஞ்சுகிட்டோம். கீதாவும் இரு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. ஆனா, அவுங்களால ஒரு காலில் கம்பு வைச்சு மெதுவாக நடக்க முடியும். கீதா இந்து, நான் கிறிஸ்தவன். ஆனா எங்க அன்புக்கோட்டுக்கு முன்னாடி மதம் ஒரு விஷயமா தெரியல. எங்க ஒரே பையன் ஆனந்த ரூபன் இப்போ பத்தாம் வகுப்பு படிக்குறான். கீதாவும் வீட்டுக்கு முன்னாடி சின்னதா ஒரு பெட்டிக்கடை வைச்சு நடத்தி வந்தாங்க.

ஆண்டவன் எங்களைக் குறையோட படைச்சாலும் நாங்க எங்க வாழ்க்கையை நல்லாவே அமைச்சுக்கிட்டோம். இப்போ கரோனா ஊரடங்கால கீதாவும் கடை திறக்க முடியல. நானும் சவாரிக்குப் போக முடியாது. இதனால வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கு. நான் தவழ்ந்து போற மாற்றுத்திறனாளிங்குறதால எந்த ஸ்டாண்டுக்கும் போய் நின்னு சவாரி ஏத்தமாட்டேன். வீட்டு வாசலில்தான் ஆட்டோ விட்டுருப்பேன். போனில் வரும் சவாரிகளை ஏத்திகிட்டுப் போவேன்.

ஸ்டாண்ட் இல்லாதவங்களை நலவாரியத்தில் சேர்க்க மாட்டாங்க. இப்படி என்னை மாதிரி நலவாரியத்தில் இல்லாத ஆயிரக்கணக்கான ஆட்டோ தொழிலாளர்கள் இருக்காங்க. அரசாங்கம் எங்களுக்கும் உதவி செய்யணும். நலவாரிய அட்டை வேண்ணா எங்களுக்கு இல்லாம இருக்கலாம். ஆனா எங்களுக்கும் வயிறு இருக்குல்ல...?”என்று பரிதாபமாய்க் கேட்கிறார் ஷாஜி.

அரசு ஆவன செய்யுமா?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x