Published : 15 Apr 2020 06:15 PM
Last Updated : 15 Apr 2020 06:15 PM

மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு: மதுரையில் சித்திரைத் திருவிழா நடக்குமா?- அரசின் முடிவை எதிர்பார்த்து அதிகாரிகள்

மதுரை

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீடிப்பதால் மதுரையில் சித்திரைத் திருவிழாக்கள் நிகழுமா என்ற சந்தேகம் பக்தர்களிடையே எழுந்துள்ளது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் மற்றும் அழகர்கோயில் சித்திரைத் திருவிழாக்கள் உலகப் புகழ்பெற்றது.

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 4ல் திருக்கல்யாணம், மே 5ல் தேரோட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல், அழகர் கோயில் கள்ளழகர் கோயிலில் சித்திரைத் திருவிழா மே 3-ம் தேதியுடன் தொடங்கி, மே 5-ம் தேதி கள்ளழகர் மலையிலிருந்து மதுரைக்குப் புறப்படுகிறார்.

வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை வரவேற்று எதிர்சேவை செய்வர். அதனைத் தொடர்ந்து மே 7-ம்தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டு கள்ளழகரை வரவேற்பதும், கள்ளழகர் வேடமணிந்து பக்தர்கள் நேர்த்தி செய்வதும் வழக்கம்.

தற்போது, கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் பாரம்பரிய சித்திரைத் திருவிழாக்கள் நடக்குமா என்ற சந்தேகம் பக்தர்களிடையே எழுந்துள்ளது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கரோனா வைரஸ் தொற்றை தேசிய பேரிடராக அறிவித்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மே 3ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதிலும் கரோனா பரவாமல் தடுக்க சமூக விலகல் அவசியம். ஆனால் மதுரை மக்கள் மீனாட்சி சுந்தரேசுவரர், கள்ளழகர் மீதும் தீராத பற்று கொண்டுள்ளவர்கள்.

திருவிழாக்களின்போது சமூக இடைவெளி கடைபிடிக்கச்செய்வது இயலாத காரியம். எனவே, திருவிழாக்கள் நடத்துவது குறித்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். தமிழக அரசின் முடிவை எதிர்பார்த்துள்ளோம். அரசு அறிவித்தால் பக்தர்கள் கூட்டமின்றி ஆகம விதிப்படி கோயில் வளாகத்திற்குள்ளாகவே திருவிழாக்கள் நடத்தப்படும். மே 3ம் தேதிக்குப்பின் ஊரடங்கு தளர்த்தப்பட்டால் அதற்குப்பின்னர் நடைபெறும் திருவிழாக்கள் நடத்துவது குறித்தும் அரசின் வழிகாட்டுதலின்படி நடத்தப்படும், என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x