Published : 15 Apr 2020 05:46 PM
Last Updated : 15 Apr 2020 05:46 PM

ஊரடங்கு நீட்டிப்பு; சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வு எப்போது?- யூபிஎஸ்சி அறிவிப்பு

நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசின் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் (prelims) தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறதா, அதன் நிலை என்ன என்பது குறித்து யூபிஎஸ்சி அறிவித்துள்ளது.

மத்திய அரசின் குடிமைப் பணிகளான ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான முதல் நிலைத்தேர்வு மே மாதம் நடக்கும். நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் எழுதும் தேர்வில் தேர்வாகும் தேர்வர்கள் முதன்மைத் தேர்வு (mains) எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

இதில் தேர்ச்சி அடைபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். ஆனால், கரோனா பாதிப்பால் இந்த ஆண்டு நடக்கவிருந்த முதல் நிலைத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு முதன்மைத் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கான நேர்முகத் தேர்வும் நடக்கவில்லை. இந்நிலையில் இதுகுறித்து யூபிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து யூபிஎஸ்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“கரோனோ தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து ஆய்வு செய்ய மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் சிறப்புக் கூட்டம் ஏப்ரல் 15-ம் தேதி நடைபெற்றது. சமூக இடைவெளி உள்ளிட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் நிலவுகின்ற தற்போதைய சூழலில், அவ்வப்போது ஆய்வுக் கூட்டங்களை நடத்த ஏற்கெனவே முடிவெடுக்கப்பட்டது.

அனைத்து நேர்முகத் தேர்வுகள், தேர்வுகள், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் தேர்வர்கள் மற்றும் ஆலோசகர்கள் வரவேண்டியதைக் கருத்தில் கொண்டு இந்தக் கூட்டங்களை நடத்தத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, 2019 குடிமைப் பணிகளுக்கான ஆளுமைத் தேர்வுகள் பற்றி, ஊரடங்கின் இரண்டாவது கட்டம் முடிவடைந்த பின்னர், இந்த ஆண்டின் மே மாதம் 3-ம் தேதிக்குப் பின்னர் முடிவெடுப்பது என இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

2020 சிவில் சர்வீஸ் தேர்வு (முதல்கட்டம் -prelims) ,பொறியியல் சேவைகள் (prelims-முதன்மை), புவியியலாளர் சேவைகள் ( prelims-முதன்மை) தேர்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன.

பின்னர் நிலவும் சூழலைப் பொறுத்து, தேவைப்பட்டால் இந்தத் தேர்வுகள் தள்ளிவைக்கப்படும் பட்சத்தில், அதுபற்றிய அறிவிப்பு மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) இணையதளத்தில் வெளியிடப்படும்.

ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வுகள், இந்திய பொருளாதார சேவை , இந்திய புள்ளியியல் சேவை தேர்வுகள் 2020 தள்ளி வைக்கப்பட்டது குறித்த அறிவிப்புகள் ஏற்கெனவே வெளியிடப் பட்டுள்ளன.

தேசிய அளவில், நிதி ஆதாரங்களைப் பாதுகாக்கும் அவசியம் குறித்து உணர்ந்து, மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஏப்ரல் முதல் ஓராண்டு காலத்துக்குப் பெறும் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 30 சதவீதத்தை தாங்களாகவே, விட்டுக்கொடுக்க முடிவு செய்துள்ளனர்”.

இவ்வாறு யூபிஎஸ்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x