Published : 15 Apr 2020 05:50 PM
Last Updated : 15 Apr 2020 05:50 PM
கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கேமரா மூலம் காய்ச்சலைக் கண்டறியும் தொழில்நுட்ப வசதியை கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று தொடங்கி வைத்தார்.
கோவை ஶ்ரீசக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, நியூநெட்ஸ் டெக்னாலஜி நிறுவனம் சார்பில் சிசிடிவி கேமரா மற்றும் மொபைல் கேமரா வழியாக காய்ச்சலைக் கண்டறியும் தெர்மல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஏப்.15) நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த தொழில்நுட்ப வசதியை தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜாடாவத் உடனிருந்தனர்.
இந்த தொழில்நுட்பம் குறித்து நியூநெட்ஸ் தலைமை செயல் அதிகாரி ஜெய் கீர்த்தி கூறும்போது, "அதிகம் பேர் ஒன்று கூடும் இடங்களில் தனித்தனியாக காய்ச்சல் பாதித்தவரைக் கண்டறியும் முறை அதிக நேரம் எடுக்கும். மேலும், மருத்துவப் பணியாளர்களுக்கு அதிக ரிஸ்க்கும் உண்டு. எனவே, இந்த புதிய தொழில்நுட்பம் காய்ச்சலைக் கண்டறிய உதவியாக இருக்கும்.
சிசிடிவி தெர்மல் ஸ்கேனிங் போன்ற பெரிய கருவிகளின் வழியாக ஒரு விநாடிக்கு 15 முதல் 20 பேரின் உடல் வெப்பத்தை பரிசோதனை செய்து, கூட்டமாக இருக்கும் பகுதியில் காய்ச்சல் இருப்பவரைக் கண்டறிய முடியும். அவரைப் புகைப்படமும் எடுத்து, சர்வரில் சேமிக்கலாம்.
மேலும், அவர் நடமாடிய பகுதியில் இருந்த மற்ற நபர்களைக் கண்டறிந்து, பரிசோதித்து, தனிமைப்படுத்த முடியும். மொபைல் கேமரா தெர்மல் ஸ்கேனிங் தொழில்நுட்பம் மூலம் விநாடிக்கு 3 பேர் வரை பரிசோதிக்க முடியும். 'ஆர்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ்' (Artificial Intelligence) எனப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தின் வழியாக இந்தத் தொழில்நுட்பம் செயல்படுகிறது" என்றார்.
"இந்த தொழில்நுட்பத்தை நியூநெட்ஸ் டெக்னாலஜிஸ் உருவாக்க அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் ஶ்ரீசக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வழங்கியுள்ளது" என்று கல்லூரி இணைச் செயலாளர் சீலன் தங்கவேலு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT