Published : 15 Apr 2020 05:40 PM
Last Updated : 15 Apr 2020 05:40 PM
லாக் டவுன் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளதையொட்டி, ஏப்ரல் 15 முதல் மே 3 வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் தங்கள் சேவைகளை வழங்கும் என்று மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு (State Level Bankers’ Committee) தெரிவித்துள்ளது.
ஊழியர்களின் வருகையைப் பொறுத்து, சுழற்சி அடிப்படையில் வேலைக்கு வரும் 50% ஊழியர்களைக் கொண்டு தங்கள் கிளைகளை வங்கிகள் இயக்கும் என்று சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24-ம் தேதி 21 நாள் லாக் டவுனை பிரதமர் மோடி அறிவித்தார். மீண்டும் நேற்று லாக் டவுன் முடிந்த நிலையில் மீண்டும் 19 நாள் லாக் டவுனை பிரதமர் அறிவித்துள்ளார்.
இதனை அடுத்து வங்கி சேவை பொதுமக்களுக்கு தங்கு தடையின்றிக் கிடைப்பது குறித்து இன்று மாநில வங்கியாளர்கள் குழு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
''லாக் டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து தமிழகத்தில் உள்ள வங்கிகள், ஏப்ரல் 15 முதல் லாக் டவுனின் கடைசி நாளான மே 3 வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சேவைகளை வழங்கும். ஊழியர்களின் வருகையைப் பொறுத்து, சுழற்சி அடிப்படையில் வேலைக்கு வரும் 50% ஊழியர்களைக் கொண்டு தங்கள் கிளைகளை வங்கிகள் இயக்கும்.
மேலும், ஒரு வங்கிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கிளைகள் நெருங்கிய பகுதிகளில் இருந்தால், அடிப்படை வங்கி சேவைகளை வழங்குவதற்காக, மாவட்ட நிர்வாகத்துடன் சரியான ஆலோசனை நடத்திய பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளை வங்கிகள் திறந்து வைக்கலாம்.
காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வங்கி சேவைகளை வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, பல்வேறு திட்டங்கள் மற்றும் வழக்கமான ஓய்வூதியங்களின் கீழ் அரசாங்கத்தால் நிவாரணத் தொகையை பெற கிளைகளில் பெரும் கூட்டம் எதிர்பார்க்கப்பட்டதால் இந்த வணிக நேரம் பின்னர் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மீட்டெடுக்கப்பட்டது.
நிலைமை மதிப்பாய்வு செய்யப்பட்ட பிறகு அந்த நேரத்தையும் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா (பி.எம்.ஜே.டி.ஒய்) கணக்கு வைத்திருப்பவர்கள் நிவாரணத் தொகை மற்றும் ஓய்வூதியம் பெறுவது நிறைவடைந்து, வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதும் படிப்படியாக நடக்கிறது. லாக் டவுன் அதிகாரிகளால் கண்டிப்பாக செயல்படுத்தப்படுவதால் பொதுமக்கள் தங்கள் பரிவர்த்தனைகளை மதியம் 1 மணியளவில் முடித்துக்கொள்கிறார்கள்.
இதனால் ஏப்ரல் 15 முதல் லாக் டவுனின் கடைசி நாளான மே 3 வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சேவைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.
மாற்று டெலிவரி சேனல்களைப் பயன்படுத்தவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளைத் தேர்வு செய்யவும் தங்கள் வாடிக்கையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் ஊக்குவிக்கவும் மாநிலத்தில் உள்ள உறுப்பு வங்கிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றன''.
இவ்வாறு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT