Published : 15 Apr 2020 02:57 PM
Last Updated : 15 Apr 2020 02:57 PM
தேசிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், வால்பாறை தேயிலை எஸ்டேட் தொழிலாளர்கள் வேலைக்கு வருமாறு கட்டாயப்படுத்தப்படுவது குறித்து, ‘இறங்கிவராத எஸ்டேட் நிர்வாகங்கள்: கரோனா தொற்று அச்சத்தில் தொழிலாளர்கள்’ என்ற தலைப்பில் ஏப்ரல் 3-ல், ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும், தேயிலைப் பறிப்பு என்பது வேளாண் தொழில் எனும் அடிப்படையில், வால்பாறை தேயிலை எஸ்டேட்டுகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே தொழிலாளர்கள் வேலைக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வேலைக்கு வரவழைப்பதாகவும், ‘சமூக இடைவெளியைப் பராமரிப்பது எங்கள் சொந்தப் பொறுப்பு’ எனத் தொழிலாளர்களிடம் எழுதி வாங்கிக்கொள்வதாகவும் பல தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள் தெரிவித்திருந்தனர்.
மேலும், வேலை செய்யும் இடத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாமல் நமக்குக் கரோனா தொற்று வந்துவிடுமோ எனும் பீதியில் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். கரோனா தொற்றுக்குள்ளான கேரளத் தொழிலாளர் ஒருவரின் மனைவி எஸ்டேட் பணிக்கு வந்திருந்தது பற்றி தெரியவந்ததும் இந்த பீதி அதிகரித்தது.
இப்படியான சூழலில், தேயிலை எஸ்டேட்டுகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வால்பாறை நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், அவர்களை எஸ்டேட் நிர்வாகங்கள் உள்ளே விடுவதில்லை எனும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
“எங்கள் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்துகொள்வோம். நீங்கள் சோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை” என்று ஆய்வாளர்களை விரட்டி விடுகிறார்களாம். இதனால் எஸ்டேட்டிற்குள் நுழைய முடியாத ஆய்வாளர்கள் திரும்பி வந்து தங்கள் உயரதிகாரிகளிடம் இதைப் பற்றி முறையிட்டிருக்கிறார்கள். அவர்களும் சம்பந்தப்பட்ட எஸ்டேட்டுகளுக்குச் சென்று ஆய்வு செய்ய முற்பட்டிருக்கிறார்கள்.
அப்படியும் பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை. ஒருசில எஸ்டேட்டுகள் அனுமதித்தாலும், அனைத்துப் பகுதிகளையும் சுற்றிப் பார்க்க விடுவதில்லை என்று புலம்புகிறார்கள் உயரதிகாரிகள்.
இது பற்றி நம்மிடம் பேசிய வால்பாறை நகராட்சி உயரதிகாரி ஒருவர், “வால்பாறையில் 58 எஸ்டேட்டுகள் உள்ளன. அவற்றில் சமூக இடைவெளி பின்பற்றப்படும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே அவற்றை இயங்க அனுமதித்திருக்கிறோம். ஆனால், அவற்றை ஆய்வு செய்ய சுகாதார ஆய்வாளர்கள் சென்றால் அவர்களை உள்ளே அனுமதிப்பதில்லை. ஒவ்வொரு இடத்திற்கும் போலீஸ் பாதுகாப்புடன் உயரதிகாரியே செல்ல முடியுமா?
வால்பாறை எஸ்டேட்டுகளைப் பொறுத்தவரை டெல்லி வரை அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள். எதற்கெடுத்தாலும், ‘அங்கே அவருடன் பேசிவிட்டேன். இவருடன் பேசிவிட்டேன்’ என்று அச்சுறுத்தி எங்களைத் திருப்பி அனுப்புவதிலேயே குறியாக இருக்கிறார்கள்” என்றார் விரக்தியுடன்.
வருவாய்த் துறை அதிகாரி ஒருவரிடம் இதுகுறித்துப் பேசினோம். “எஸ்டேட்டுகள் தொழிலாளர்களை வேலைக்கு அழைக்கும்போதே துணை ஆட்சியர் முதற்கொண்டு மாவட்ட ஆட்சியர் வரை சில தொழிற்சங்கங்கள் புகார் அளித்தன. அவர்களும் எஸ்டேட்டுகளில் சமூக இடைவெளி சரியாகப் பின்பற்றப்படுகிறதா, தொழிலாளர்களுக்கு உரிய முகக்கவசம், பாதுகாப்பு உபகரணங்கள் அளிக்கப்படுகிறதா என்று முழுமையாகப் பார்த்து அனுமதிக்கும்படியே உத்தரவிட்டிருந்தார்கள். ஆனால் இங்கே அதற்கு யாருமே ஒத்துழைப்பதில்லை. மேலிடத்திலிருந்து சிறப்பு உத்தரவு வாங்கி போலீஸ் பாதுகாப்புடன் உயரதிகாரிகள் வந்து ஆய்வு செய்தால்தான் இதைச் சரிசெய்ய முடியும்” என்று சொன்னார் அவர்.
தொடர்ந்து நீடிக்கும் இந்தப் பிரச்சினைகளிலிருந்து தொழிலாளர்களுக்கு எப்போதுதான் தீர்வு கிடைக்குமோ?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment