Published : 15 Apr 2020 12:54 PM
Last Updated : 15 Apr 2020 12:54 PM
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை உயர்வதால் பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (ஏப்.15) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று நோயினால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதால், பரிசோதனை மையங்களையும், சோதனை எண்ணிக்கையையும் அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
நாடு முழுவதும் கரோனா பாதிப்பின் வீரியம் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், தமிழகத்தில் இந்நோயால் பாதிக்கப்பட்ட 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதும், எந்தவித அறிகுறியும் இல்லாமல் திடீரென கரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் அதிக அளவில் இருப்பதும் மிகுந்த கவலை அளிக்கிறது.
நோய்ப் பரவலைத் தடுக்க ஊரடங்குக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயல்படுகிறமோ அதற்கு இணையாக, பரிசோதனைகளின் அளவை அதிகப்படுத்துவதும் அவசியமாகிறது.
தமிழகத்தில் நேற்று வரை 19 ஆயிரத்து 255 பேர் மட்டுமே முழுமையாக பரிசோதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது கரோனாவைத் தடுக்கப் போதுமானதாக தெரியவில்லை. எனவே, தமிழகத்தில் செயல்படும் அரசு மற்றும் தனியார் கரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளைத் தாண்டி போதுமான கட்டமைப்பைக் கொண்டிருக்கிற தனியார் மருத்துவமனைகளையும் அதிக அளவில் சோதனை மையங்களாக மாற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரோனா எதிர்ப்புப் போரில் தங்களின் பங்களிப்பை மக்களுக்கு வழங்க வேண்டிய கடமை அவர்களுக்கும் இருக்கிறது. இதன் மூலம் நாள்தோறும் பரிசோதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைப் பன்மடங்கு உயர்த்த முடியும்.
மேலும், மற்ற மாநிலங்களில் செய்வதைப் போன்று தமிழகத்தில் இதுவரை 'ரேண்டம் சாம்பிள்' முறையில் பரிசோதனைகள் போதுமான அளவில் செய்யப்படவில்லை என்று செய்திகள் வருகின்றன. நோய்த்தொற்று கண்டறியப்பட்டு கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருக்கிற இடங்களில் மட்டுமே முழு கவனம் செலுத்தப்படுவதாக தெரிகிறது.
உதாரணத்திற்கு சென்னையில் கட்டுப்பாட்டு பகுதி அல்லாத மற்ற இடங்களில் குடும்ப உறுப்பினர்களின் பெயர், வயது போன்ற ஒன்றிரண்டு மேலோட்டமான கேள்விகளோடு நோய் கண்டறிதலுக்கான கணக்கெடுப்பு முடித்துக்கொள்ளப்படுகிறது. ஆனால், இந்தக் கணக்கெடுப்பையே சோதனை என்றும், இதுவரை 93% பேரிடம் சோதனை நடத்தப்பட்டுவிட்டதாகவும் சென்னை மாநகராட்சி குறிப்பிட்டிருப்பது சரியான நடைமுறை இல்லை.
ஏற்கெனவே கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட இந்திய மாநிலங்களில் நேற்றைய நிலவரப்படி தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ள நிலையில், தமிழக அரசு இப்படி ஏனோதானோவென்று நடந்து கொள்ளாமல், நோயை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவர எல்லா பகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்" என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT