Published : 15 Apr 2020 11:51 AM
Last Updated : 15 Apr 2020 11:51 AM
கரோனா வைரஸ் பாதிப்பால் திருப்பூர் பின்னலாடை துறை கடும் நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், இதற்கு மேலும் உற்பத்தி நிறுத்தத்தைத் தொடராமல் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் நிறுவனங்கள் செயல்பட மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும், இல்லையெனில் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும் என தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் பின்னலாடை துறை உற்பத்தி கேந்திரமாக உள்ள நகரம் திருப்பூர். இங்கு ஜாப் ஆர்டர் கையாளும் நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை சுமார் 10 ஆயிரம் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வரை ஏற்றுமதி வர்த்தகம் மற்றும் உள்நாட்டு உற்பத்தி நடைபெற்று வருகிறது. பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறும் 10 லட்சம் தொழிலாளர்களை இந்நகரம் தன்னகத்தே கொண்டது. நாட்டின் அந்நிய செலாவணியில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
இந்நிலையில், கரோனா வைரஸ் பரவலால் மத்திய, மாநில அரசுகளின் ஊரடங்கு மற்றும் தடையுத்தரவு காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் உற்பத்தி நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதே நிலை தற்போது வரை தொடர்ந்து வருகிறது. மேலும், கரோனா வைரஸ் பரவல் அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்து வருவதால் ஊரடங்கு உத்தரவை வரும் மே 3-ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
ஏற்கெனவே ஆர்டர்களை முடிக்க இயலாமல் சிக்கியுள்ள திருப்பூர் தொழில் துறையினர், வேலை மற்றும் வருமானத்தை இழந்துள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் இது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கரோனா வைரஸ் தாக்கத்தால் உற்பத்தி நிறுத்தத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் மீண்டும் எப்போது இயல்பு நிலைக்குத் திரும்பும் என்பதும், தொழிலாளர்களின் நிலை மீளும் என்பதுமே பலரிடம் தற்போதுள்ள முக்கியமான கேள்வியாக உள்ளது.
இவற்றுக்கு மத்தியில் உற்பத்தி நிறுத்தம் தொடர்ந்து கொண்டே சென்றால் வரும் நாட்களில் தொழில் துறையும், அதை சார்ந்த தொழிலாளர்களும் மிகப்பெரும் நெருக்கடியை சந்திக்க வேண்டியது வரும். எனவே ஜப்பான் போன்ற பிற நாடுகளில் உள்ளது போல் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை திருப்பூர் தொழில் துறையினர் முன்வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா எம்.சண்முகம் 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியதாவது:
"கரோனா வைரஸ் பிரச்சினை தற்போது முடியும் நிலையில் இல்லை. நாம் பயந்து கொண்டு உற்பத்தி நிறுத்தத்தைத் தொடர்ந்து கொண்டே சென்றால், மிகப்பெரும் பின் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும். பின்னலாடை துறை என்பது காலநிலை (சீஸன்) மாற்றத்துக்கு ஏற்ப உற்பத்தி செய்யும் துறை. தற்போதைய கோடை கால பருவம் என்பது மிகவும் திருப்பூர் தொழில் துறைக்கு முக்கியமானது. தற்போது பின்னலாடைகளுக்கான மாதிரிகளை அனுப்ப வேண்டிய தருணம். அவ்வாறு அனுப்பினால் மட்டுமே ஆர்டர்களை பெற முடியும். இல்லையெனில் கோடை காலத்தில் பருவத்தில் வரும் 3 சீஸனுக்கான ஆர்டர்களை இழக்க நேரிடும்.
ஏற்கெனவே நமது போட்டி நாடுகளான பாகிஸ்தான், கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுகள் உற்பத்தியைத் தொடங்கி விட்டன. வங்கதேசம் பாதி செயல்பாட்டை தொடங்கி விட்டது. ஸ்பெயின் நாட்டில் தொழில் துறை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் உரிய பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றிக் கொண்டு உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஆர்டர்களும், சர்வதேச வர்த்தகர்களும் ஒருமுறை நம்மை விட்டு சென்றால் மீண்டும் பிடிப்பது இயலாத காரியம். எனவே உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், அவற்றை சார்ந்த தொழில் நிறுவனங்களை செயல்பட மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும்.
மக்களிடமும் உரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே உலக நாடுகளில் கரோனா பரவிய போது திருப்பூரில் பாதுகாப்பு அம்சங்களுடன் உற்பத்தி நடைபெற்றதை அரசுகள் நினைவில் கொள்ள வேண்டும். ஏற்கெனவே 21 நாட்கள் உற்பத்தி நிறுத்தம் செய்தாகி விட்டது. இதற்கு மேலும் என்றால் தொழில் துறை தாக்குப்பிடிக்காது. அதை சார்ந்த தொழிலாளர்களும் கடுமையான பாதிப்பை சந்திப்பார்கள்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT