

அரசுத் துறையினரின் அயராத உழைப்பால் தருமபுரி மாவட்டத்தில் இன்றுவரை கரோனா தொற்று இல்லாத நிலை நீடிக்கிறது என உயர் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட 12 அரசு மருத்துவமனைகளுக்கு காய்ச்சல் கண்டறியும் கருவி உள்ளிட்ட உபரகணங்களை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தருமபுரி மாவட்டத்தில் இன்றுவரை கரோனா தொற்று கண்டறியப்படவில்லை. வெளி நாடுகளில் இருந்து தருமபுரி திரும்பியவர்கள் 668 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்ட நிலையில் யாருக்கும் கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, வெளி மாநிலங்களில் இருந்து தருமபுரி திரும்பிய 9,865 நபர்களிலும் யாருக்கும் தொற்று அறிகுறி இல்லை. இந்த 9,865 நபர்களில் 50 பேருக்கு ஒரு மருத்துவக் குழு வீதம் குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. மாவட்டத்தில் சுகாதாரம், காவல், வருவாய், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட அரசுத் துறையினர் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர். இந்த அயராத பணியால் இன்றுவரை தருமபுரி மாவட்டத்தை கரோனா தொற்று தாக்காத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.