Published : 14 Apr 2020 06:22 PM
Last Updated : 14 Apr 2020 06:22 PM
தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் மீனவர்கள் கடலுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் 25 நாட்களுக்கு பின்னர் நிபந்தனைகளுக்குள்பட்டு நாட்டுப்படகு மீனவர்களுக்கு மட்டும் கடலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவுவதைத் தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் சமூக இடைவெளி அவசியம் தமிழகத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல கடந்த மார்ச் 20 முதல் தடை விதிக்கப்பட்டது.
தொடர்ந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை வயர்லெஸ் ரேடியோ மூலம் கரைக்கு உடனடியாகத் திரும்பும்படி அழைப்பு விடுத்தனர். மறுநாள் மார்ச் 20 முதல் தமிழக மீன்பிடி இறங்குதளங்கள், ஏலம் விடும் இடங்கள் எல்லாம் மூடப்பட்டன. மீனவர்கள் தங்களது படகுகளைப் பாதுகாப்பாக கரையோரங்களில் நிறுத்தி வைத்தனர்.
இதனால் தமிழகம் முழுவதும் உள்ள 50 லட்சத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்களும், மீன்பிடி தொழில் சார்ந்து தொழிலாளர்களின் வாழ்வாதாரம் நேரடியாகப் பாதிக்கப்பட்டதுடன், மீனவர்கள் கடலுக்குச் செல்லாதால் தினமும் 50 கோடி வரையிலுமான வர்த்தகமும் முடங்கிப்போயின.
இந்நிலையில் 25 நாட்கள் கழித்து ஊரடங்கு காலத்தில் இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகில் சென்று மீன் பிடிக்க தமிழக அரசு நிபந்தனைக்குட்பட்டு செவ்வாய்கிழமை அனுமதி அளித்தது.
இதனடிப்படையில் பாரம்பரிய மற்றும் இயந்திரம் பொருத்திய நாட்டுப்படகுகளுக்கு மட்டுமே அனுமதி. விசைப்படகுகளுக்கு அனுமதியில்லை. கடலில் பிடித்து வரும் மீன்களை ஏலக்கூடங்களில் விற்கக் கூடாது.
ஏலக் கூடங்களில் மீனவா்கள் கூட்டமாக நிற்கக் கூடாது. அந்தந்தக் கிராமங்களில் உள்ள மீன் வியாபாரிகளிடமே மீன்களை விற்பனை செய்ய வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட நாள்களில் காலை 7 மணிக்குள் மொத்த வியாபாரிகளிடம் மீன்களை விற்றுக் கொள்ளலாம். நிபந்தனையை மீறி அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குப் பிறகு விற்கப்படும் மீன்கள் பறிமுதல் செய்யப்படும்.
மீனவ கிராமங்களில் சமூக இடைவெளியுடன் மீன்கள் விற்பனை நடைபெறுவதை ஊா் குழு, மீனவா் சங்கங்கள் குழு அமைத்து உறுதிப்படுத்தவேண்டும்.
கடலுக்குச் செல்லும்போதும், திரும்பும் போதும் படகுகள் போதிய இடைவெளிவிட்டு செல்ல வேண்டும். மீனவா்கள் முகக்கவசம், கையுறை அணிவது அவசியம். படகுகள், வலைகள், பிடித்து வரும் மீன்களை சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும்.
மீனவா்கள் கைகளை அவ்வப்போது கழுவவேண்டும். நிபந்தனைகளை மீறும் படகுகளுக்கு அனுமதி ரத்து செய்யப்படும் என மீன்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எஸ். முஹம்மது ராஃபி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT