Last Updated : 14 Apr, 2020 06:12 PM

 

Published : 14 Apr 2020 06:12 PM
Last Updated : 14 Apr 2020 06:12 PM

நாட்டுப்படகுகளில் மீன்பாடு அதிகரித்தும் வாங்க ஆளில்லாததால் தவித்த மீனவர்கள்

ராமநாதபுரம்

ராமநாதபுரம் தேவிபட்டினம் பகுதியில் நாட்டுப்படகுகளில் அதிகளவில் மீன்வரத்து இருந்தும், வாங்க வியாபாரிகள் இல்லாததால் மீனவர்கள் தவித்தனர்.

ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில் மீன்பிடிக்க அரசு தடைவிதித்தது. இந்நிலையில் மீன் இனப்பெருக்கத்திற்காக விசைப்படகுகளுக்கான மீன்பிடித் தடைக்காலம் ஏப்ரல் 1 முதல் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் அரசு நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த திங்கள்கிழமை முதல் நிபந்தனைகளுடன் மீன்பிடிக்க அனுமதி வழங்கியது. அதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4500-க்கும் மேற்பட்ட நாட்டுபடகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் அருகே தேவிபட்டினத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். வழக்கத்தைவிட மீனவர்களுக்கு மீன்கள் அதிகளவில் பிடிபட்டதால் மகிழ்ச்சியாக நேற்று காலை கரை திரும்பினர்.

ஒவ்வொரு மீனவரும் 20 கிலோ வரை மீன்கள், 10 கிலோ வரை நண்டு பிடித்து வந்திருந்தினர் மீன்பாடு அதிகம் இருந்தும், வாங்க வியாபாரிகள் வரவில்லை. உள்ளூர் வியாபாரிகள் மட்டுமே கொள்முதல் செய்யலாம் என்ற அரசின் நிபந்தனையால், வெளியூர் வியாபாரிகள் வரவில்லை.

அதனால் மீனவர்களால் பிடித்து வந்த மீன், நண்டு, இறால்களை விற்க முடியவில்லை.

மீனவர் முனியசாமி(50) கூறியதாவது, தேவிட்டினத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நண்டு கிலோ ரூ.400-க்கு விற்ற நிலையில், இன்று (நேற்று) ரூ.200-க்கு தான் விற்கப்பட்டது. பல வகை மீன்கள் கிலோ ரூ. 150 முதல் 200-க்கு விற்கப்பட்டது.

ஆனால் தற்போது ரூ.100 முதல் ரூ.120-க்கு விற்கப்படுகிறது. இறால் ரூ.300 முதல் ரூ.500-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.300 வரையே விற்கப்பட்டது. அதனால் மீன்பிடிக்கச் சென்று வந்தவர்களுக்கு டீசல் செலவு, கூலிக்கே மிஞ்சவில்லை.

ஆகவே மீனவர் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளை தளர்த்தி வியாபாரிகளை சமூக இடைவெளியோடு வாங்க அரசு அனுமதிக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x