Published : 14 Apr 2020 04:08 PM
Last Updated : 14 Apr 2020 04:08 PM
ஊரடங்கின் போது சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் தவித்ததால் மதுரை காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 21 நாட்களுக்கு பிறகு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கரோனா பரவலை தடுக்க மார்ச் 25 முதல் ஏப். 14 வரை 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தற்போது இந்த ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதல் ஊரடங்கு உத்தரவு மார்ச் 24-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது.
திடீர் ஊரடங்கு அறிவிப்பால் மதுரையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பஸ் நிலையங்களில் காத்திருந்தவர்களால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியவில்லை.
இதையடுத்து மதுரை பஸ் நிலையங்களில் தவித்த 179 பேர் பழங்காநத்தம், திருப்பரங்குன்றம், பூங்கா நகர் முருகன் கோவில் திருமண மண்டபம், ஹார்விப்பட்டி, காக்கைபாடினார் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.
இவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், கரோனா தொற்று இல்லாதது உறுதியானது. இதையடுத்து சொந்த ஊர்களுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்தனர்.
இவர்களை செஞ்சிலுவை சங்கத்தின் வாகனங்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் உத்தரவிட்டார்.
இந்த நிகழ்வு பூங்கா நகர் முருகன் கோவிலில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் வினய், மாநகர் காவல் ஆணையர் டேவிட்சன் ஆசிர்வாதம், மாநகராட்சி ஆணையர் விசாகன், அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் லில்லி ரோஸ், செஞ்சிலுவை சங்க மாவட்ட செயலர் கோபாலகிருஷ்ணன், அவைத் தலைவர் ஜோஸ், பொருளாளர், வழக்கறிஞர் முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல் கட்டமாக மதுரை, மதுரை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 62 பேர் நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர். எஞ்சியவர்கள் இன்று அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
முன்னதாக அனைவருக்கும் மீண்டும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட்டது. 15 பேர் செல்லும் வாகனங்களில் சமூக விலகலை பின்பற்றும் வகையில் 8 பேர் மட்டுமே அழைத்துச் செல்லப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT