Published : 14 Apr 2020 02:56 PM
Last Updated : 14 Apr 2020 02:56 PM
முகக்கவசம் அணியத் தவறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று பதிவிட்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, இது தொடர்பாக தொடர் கேள்விகள் எழுப்பப்பட்டதால் அப்பதிவை நீக்கினார்.
வாரந்தோறும் வார இறுதி நாட்களில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆய்வினை மேற்கொள்வது வழக்கம். கரோனா தொற்று அச்சுறுத்தல் எழுந்த பிறகு அவர் ஆய்வு ஏதும் மேற்கொள்வதில்லை. ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸிலிருந்து வெளியே வருவதில்லை என்று மக்கள் பிரதிநிதிகளே சுட்டிக்காட்டும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று (ஏப்.14) தனது வாட்ஸ் அப்பில் புதிய தகவலைப் பதிவேற்றினார். அதில், "முகக்கவசம் அணியத் தவறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். மோட்டார் வாகனச்சட்டம் 179-ன் கீழ் முகக்கவசம் அணியாத நபர்கள் மீது அபராதம் விதிக்கவோ, வழக்குப் பதிவு செய்யவோ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்று பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து அவரிடம் பல பத்திரிகையாளர்கள் தொடர்பு கொண்டு கேட்டனர். அத்துடன் உயர்காவல்துறை அதிகாரிகள், போக்குவரத்துத்துறை அதிகாரிகளும் தொடர்பு கொண்டு பேசினர். அவர்கள் மோட்டார் வாகனச் சட்டத்தில் முகக்கவசம் பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை என்று தெளிவுபடுத்தினர்.
அதைத்தொடர்ந்து பலரும் கேள்விகள் எழுப்பியதால் ஆளுநர் தனது பதிவை நீக்கியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT