Published : 14 Apr 2020 12:18 PM
Last Updated : 14 Apr 2020 12:18 PM
திருநெல்வேலியில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 700 படுக்கைகளுடன் வார்டுகள் தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள மண்டல சிறப்பு அலுவலரும் தமிழக அரசின் கைத்தறி மற்றும் ஜவுளித்துறை செயலருமான மு. கருணாகரன் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் 56 பேர் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.
திருநெல்வேலியில் மேலப்பாளையம், டவுண், கோடீஸ்வர்நகர்,பேட்டை, களக்காடு, பத்தமடை, பாளையங்கோட்டை, வள்ளியூர் ஆகிய 8 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தனிமைப்படுத்தப்பட்டுள்ள 17672 வீடுகளில் இருப்போருக்கு தேவையான உணவுபொருட்கள் ,அத்தியவாசிய பொருட்கள் தக்க பாதுகாப்புடன் தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.
கரோனா பாதிப்புக்கு உள்ளான கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு மருத்துவம் பார்பதற்கு அரசு மருத்துவமனையில் தனி வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் தொற்று உள்ளவர்களுக்கு அரசு மருத்துவமனையில் 500 படுக்கைகளும், பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் 200 படுக்கைகள் கொண்ட வார்டுகள் தயார் நிலையில் உள்ளது.
மருத்துவப் பணிகளை மேற்கொள்ளும் செவிலியர்கள், மருந்துவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது உணவு, முககவவங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், காவல் துணை தலைவர் பிரவீன் குமார், மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர், துணை ஆணையர் சரவணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT