Published : 14 Apr 2020 10:59 AM
Last Updated : 14 Apr 2020 10:59 AM
தமிழக அரசு ரமலான் நோன்பை முன்னிட்டு முஸ்லிம்களுக்கு பச்சரிசி கொடுத்து, பள்ளிவாசல்களில் கஞ்சி காய்ச்சுவதற்கு அனுமதி வழங்கிட வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஏப்.14) வெளியிட்ட அறிக்கையில், "தமிழக அரசு கரோனா வைரஸ் பரவல் தடுப்புக்காக எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு கொடுத்து வருவதால் கரோனாவில் இருந்து விரைவில் தப்பித்து விடலாம் என்ற நம்பிக்கை எழுகிறது.
முஸ்லிம்கள் ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது வழக்கமானது. நோன்பு என்றால் கட்டாயம் நோன்பு கஞ்சி தான் நினைவுக்கு வரும். தங்களின் சொந்த செலவிலேயே கஞ்சியை காய்ச்சி பள்ளிவாசலுக்கு வரும் நோன்பாளிகளுக்கு கொடுப்பர். குறிப்பாக பள்ளிவாசல் நாடி வரும் அனைத்து மக்களுக்கும் கஞ்சி கொடுப்பது மட்டுமல்ல மற்றவர்களுக்கு உதவிகளும் செய்து வருகிறார்கள்.
முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் 30 நாட்கள் உண்ணா நோன்பு இருந்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று. தற்போதைய கரோனா பரவல் காரணத்தால் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பை கொடுத்து வருகின்ற தமிழக அரசு பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி காய்ச்சவும் நடவடிக்கை எடுக்கலாம்.
அதாவது, பள்ளிவாசல்களில் சமூக இடைவெளி, சுத்தம், சுகாதாரம் உள்ளிட்ட பலவற்றுக்கு முன்னேற்பாடான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு கஞ்சி காய்ச்சவும், கொடுக்கவும் அனுமதி வழங்கலாம். காரணம் நோன்பு கஞ்சி என்பது அரை நூற்றாண்டுக்கும் மேலாக முஸ்லிம்களின் நோன்பு கால விரதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த்தாக இருக்கிறது.
எனவே, இந்த ஆண்டு வருகின்ற ஏப்ரல் 25 ஆம் தேதி ரமலான் நோன்பு தொடங்குகின்றதால் தமிழக அரசு கரோனா காலத்தை கவனத்தில் கொண்டாலும் தேவையான முன்னேற்பாடான, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து முஸ்லிம்களின் நோன்பு கஞ்சி சம்பந்தமான கோரிக்கையையும் நிறைவேற்ற கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழக அரசு முஸ்லிம்கள் நோன்பு கஞ்சி காய்ச்ச வழக்கம் போல பச்சரிசியை கொடுக்க வேண்டும்.
எனவே, தமிழக அரசு ரமலான் நோன்பை முன்னிட்டு முஸ்லிம்களுக்கு பச்சரிசி கொடுத்து, பள்ளிவாசல்களில் கஞ்சி காய்ச்சுவதற்கு அனுமதி வழங்கிட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT