Last Updated : 14 Apr, 2020 10:48 AM

 

Published : 14 Apr 2020 10:48 AM
Last Updated : 14 Apr 2020 10:48 AM

ஊரடங்கை மீறி மக்களைக் கூட்டி அரிசி வழங்கியதாக புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ மீது மீண்டும் வழக்கு

ஜான்குமார்: கோப்புப்படம்

புதுச்சேரி

ஊரடங்கை மீறி மக்களை ஒரே இடத்தில் கூட்டி அரிசி வழங்கியதாக புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ மீது மீண்டும் வழக்கு பதிவாகியுள்ளது. விலை அதிகரிப்பால் தொகுதி மக்களுக்கு இலவசமாக அரிசியை புதுச்சேரியில் பல எம்எல்ஏக்கள்,பல்வேறு கட்சியினர் வீடுவீடாக சென்று வழங்க தொடங்கியுள்ளனர்.

புதுச்சேரியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஊரடங்கு உத்தரவை காரணம் காட்டி அரிசியின் விலை உயர்ந்துள்ளது. ஊரடங்கால் தினந்தோறும் பணிக்கு சென்றால்தான் ஊதியம் என்ற நிலையில் இருக்கும் பலரும் கடும் பாதிப்பில் உள்ளனர்.

ஏற்கெனவே மக்களை கூட்டி காய்கறி தந்ததற்காக காங்கிரஸ் எம்எல்ஏ ஜான்குமார் மீது வழக்குப்பதிவாகியுள்ளது. இவர் தனது நெல்லித்தோப்பு தொகுதியை முதல்வர் நாராயணசாமிக்கு விட்டு தந்து பின்னர் காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவானவர். எனினும் இவர் வசிக்கும் நெல்லித்தோப்பு பகுதியில் மீண்டும் மக்களை கூட்டி அரிசி வழங்கியதாக உருளையன்பேட்டை போலீஸார் அவர் மீது இரண்டாவதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக உருளையன்பேட்டை போலீஸார் கூறுகையில், "ஊரடங்கை மீறி மக்களை கூட்டி அரிசி தந்ததாக தாசில்தார் ரவிச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றனர்.

இதேபோல் அரிசியை மக்களை ஓரிடத்தில் கூட்டி தந்ததாக பாஜக எம்எல்ஏ சாமிநாதன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மாஹே எம்எல்ஏ ராமசந்திரன் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் அரசை இதுதொடர்பாக கடுமையாக விமர்சித்தனர்.

ஏற்கெனவே புதுச்சேரியில் பல எம்எல்ஏக்களும் தொடர்ந்து தங்கள் தொகுதியில் வீடு வீடாக சென்று அரிசி வழங்கி வருகின்றனர். அவர்கள் மட்டுமில்லாமல் பல கட்சியினரும், சமூக அமைப்பினரும் உணவு தருதல், காய்கறி தருதல், அரிசி தருதல் போன்ற பணிகளை வீடு வீடாக சென்று சமூக இடைவெளியுடன் செய்வதாக குறிப்பிடுகின்றனர்.

அதிமுக எம்எல்ஏ அன்பழகன், திமுக எம்எல்ஏ சிவா, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் லட்சுமி நாராயணன், அரசு கொறடா அனந்தராமன் தொடங்கி பல எம்எல்ஏக்கள் வீடு வீடாக சென்று வழங்குவதாக தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக பல்வேறு எம்எல்ஏக்கள், அரசியல் கட்சியினரிடம் பேசியபோது, "சுமார் 1.5 லட்சம் குடும்பங்கள் சிவப்பு அட்டை கொண்டு ஏழை குடும்பங்கள். புதுச்சேரியில் ரேஷன் கடைகள் இயங்காததால் அரிசி தரவில்லை. வங்கி கணக்கிலும் தொடர்ந்து புதுச்சேரி அரசு இலவச அரிசிக்கான பணத்தை தருவதில்லை.

இச்சூழலில் மத்திய அரசு உத்தரவுப்படி ஏழை மக்களுக்கு அரிசி விநியோகத்தை துறை அமைச்சர் கந்தசாமி தனது தொகுதியில் தொடங்கினார். முதலில் காங்கிரஸ் கட்சி தொகுதிகளுக்குதான் தரப்படுகிறது. பல தொகுதிகளில் இந்த இலவச அரிசி தரப்படவில்லை.

தற்போதைய ஊரடங்குக்கு ரூ.2,000 அளித்த தொகையும் போதவில்லை என்று குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இதையடுத்து பலரும் தங்கள் தொகுதி எம்எல்ஏக்களையும், அரசியல் கட்சியினரையும்தான் நாடுகின்றனர். அதனால் தருகிறோம்" என்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x