Last Updated : 14 Apr, 2020 10:27 AM

 

Published : 14 Apr 2020 10:27 AM
Last Updated : 14 Apr 2020 10:27 AM

ரேஷன் கடைகள் மூலம் முகக்கவசம், கிருமிநாசினி: கடலூர் குடியிருப்போர் நலச்சங்கம் முதல்வருக்குக் கடிதம்

மருதவாணன்

அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டைவிட்டு வெளியில் வரும் அனைவருமே கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், ரேஷன் கடைகளில் முகக்கவசம் மற்றும் கிருமி நாசினிகளை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 21 நாட்கள் ஊரடங்கு முடிந்து ஏப்ரல் 30-ம் தேதி வரை மேலும் நீடிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஊரடங்கு நீட்டிப்பை அடுத்து, பொது மக்கள் தரப்பிலிருந்து அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, அங்காடிகள் மூலமாக முகக் கவசம் மற்றும் கிருமி நாசினிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.மருதவாணன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை கடிதத்தில் கூறியிருப்பதாவது:

‘தமிழகத்தில் கரோனா நோயை ஒழித்திட தாங்களும் தங்களின் நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளும் அயராது பணியாற்றி வருவதற்கு தமிழக மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். கரோனாவை தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக்தில் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள அனைத்து மக்களுக்கும் நிவாரணம் பெறும் வகையில் கீழ்க்கண்டவற்றையும் அமல்படுத்திட வேண்டும் என்று அன்புடன் கேட்டு கொள்கிறோம் .

ரூபாய் 500-க்கு ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ள மளிகைப் பொருட்களை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாகவே வழங்க வேண்டுகிறோம். குடும்ப அட்டை இல்லாத எளியவர்களுக்கும் இந்த நிவாரணத்தை இலவசமாக வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா பத்து முகக் கவசம் மற்றும் கிருமிநாசினி பாட்டில்களை பிரதி மாதம் வழங்கிட வேண்டும்.

தமிழகத்தில் தொண்டு நிறுவனங்களும் தனி நபர்களும் அவர்கள் விரும்பும் பகுதிகளுக்கு நிவாரண பொருட்களை அளித்திட விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கி அவர்களுக்கு உரிய அனுமதி வழங்க வேண்டும்.

அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் மருத்துவரகள், மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் இதர மருத்துவப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு மத்திய அரசு அறிவித்தது போன்று 50 லட்ச ரூபாய்க்கு மருத்துவக் காப்பீடு செய்திட வேண்டும் .

இதேபோன்று ஏனைய அரசு துறை மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு சிறப்பு நிவாரண உதவிகளைச் செய்திட வேண்டும். தூய்மைப் பணியில் ஈடுபடுபவர்கள் கரோனா தாக்கி இறக்க நேரிட்டால் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என டெல்லி மாநில அரசு அறிவித்திருக்கிறது. அதேபோல் தமிழக அரசும் அறிவிப்பு செய்து, கரோனா தடுப்பு பணியில் இருக்கும் மனிதநேயமிக்க மனிதர்களுக்கு ஊக்கத்தையும் தைரியத்தையும் அளிக்க வேண்டும்.’

இவ்வாறு மருதவாணன் முதல்வருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x