Published : 14 Apr 2020 10:26 AM
Last Updated : 14 Apr 2020 10:26 AM
தமிழகத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இலவச உணவுப் பொருட்களுடன், கூடுதலாக வாரத்திற்கு ரூ.1,000 வீதம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, ராமதாஸ் இன்று (ஏப்.14) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோய் பரவலைத் தடுக்க இம்மாதம் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அமைப்பு சாரா தொழிலாளர்களும், அன்றாடம் வாழ்வாதாரம் ஈட்டும் மக்களும் அதிகமுள்ள தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஊரடங்கை நடைமுறைப்படுத்துவது எளிதான ஒன்றல்ல. மக்களைக் காக்க வேறு வழியின்றி எடுக்கப்பட்ட முடிவு தான் ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதாகும்.
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தாக்குதல் முதன்முதலில் கண்டறியப்பட்டது மார்ச் 7-ம் தேதி தான். அதன்பின் 24-ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்படும் வரையிலான 18 நாட்களில் மொத்தம் 18 பேருக்கு மட்டும் தான் கரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. ஆனால், அதற்கு பிந்தைய 20 நாட்களில் 1,155 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு, நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,173 ஆக அதிகரித்திருக்கிறது.
ஒப்பீட்டளவில் இந்த எண்ணிக்கை அதிகமாக தெரியலாம். ஆனால், இதேகாலத்தில் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் லட்சக்கணக்கான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் கரோனா பரவல் இந்த எண்ணிக்கையில் கட்டுப்படுத்தப்பட்டதற்கு காரணம் ஊரடங்கு ஆணை மக்களால் முழுமையாக கடைபிடிக்கப்பட்டது தான்.
ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டதால், தற்காலிகமாக நாம் கல்வியை இழந்தோம்; வேலைவாய்ப்பை இழந்தோம்; வாழ்வாதாரம் இழந்தோம்; பொருளாதாரம் இழந்தோம் என்பவை எல்லாம் மறுக்க முடியாத உண்மைகள். ஆனால், இவை அனைத்துமே கரோனா என்ற கொடிய வைரஸை ஒழிப்பதற்காக நாம் செய்யும் தியாகங்கள் தான். இந்த தியாகங்களை செய்யாமல் கரோனா வைரஸை ஒழிக்க முடியாது.
அவ்வாறு ஊரடங்கு என்ற தியாகத்தை செய்யத் தாமதித்ததால் இத்தாலி அனுபவித்து வரும் துயரங்களை சுட்டிக்காட்டினால் தான் ஊரடங்கின் தேவை புரியும். இந்தியாவில் ஜனவரி 30-ம் தேதியன்று முதல் கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதன்பின் 21 நாட்கள் கழித்து தான் இத்தாலியின் லோதி மாகாணத்தில் முதல் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்த நாளே வெண்டோ மாகாணத்தில் ஒருவர் கரோனா பாதிப்பால் இறந்தார்.
முதல் தொற்று கண்டுபிடிக்கப்பட்ட 6 நாட்களில் 322 பேருக்கு தொற்று பரவியிருந்தது; 10 பேர் உயிரிழந்திருந்தனர். அப்போதே அங்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப் பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், இத்தாலியின் பொருளாதாரத் தலைநகரமான மிலன் நகரின் மேயர் அவற்றை நிராகரித்து விட்டார்.
"கரோனாவுக்காக மிலன் நிற்காது" என்ற பிரச்சாரத்தை அவர் முன்னெடுத்தார். மூடப்பட்ட பள்ளிகள் திறக்கப்பட்டன. நிலைமை மோசமடைந்தது. இறுதியாக மார்ச் 20-ம் தேதி தான் முழுமையான ஊரடங்கு நடைமுறைப்பட்டது. அதற்குள் இத்தாலியில் 47 ஆயிரத்து 21 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்; 4,032 பேர் உயிரிழந்திருந்தனர். அதற்கு முன்பாகவே சமூகப்பரவல் தொடங்கியிருந்ததால் தான் இத்தாலியில் இன்று நிலைமை இவ்வளவு மோசமாகியிருக்கிறது.
இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் கரோனா பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றால், ஊரடங்கு ஆணை மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதும், அதிக எண்ணிக்கையில் சோதனைகள் செய்யப்படுவதும் அவசியம் ஆகும்.
அந்த வகையில் தமிழக அரசு அதன் கடமையை செய்து வரும் நேரத்தில், இப்போது நீட்டிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு ஆணையும் முழுமையாக வெற்றி பெற அனைத்துத் தரப்பு மக்களும் முழுமையான ஆதரவை அளிக்க வேண்டும். அரசு பிறப்பிக்கும் அனைத்து ஆணைகளையும் மதித்து, வீடுகளை விட்டு வெளியில் வராமல் ஒத்துழைக்க வேண்டும்.
ஊரடங்கால் பொதுமக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் நிலையில், அவர்கள் பட்டினியின்றி வாழ்ந்தால் தான், அவர்களின் ஒத்துழைப்புடன் ஊரடங்கு முழுமையாக வெற்றி பெறும்.
அதை உறுதி செய்யும் வகையில் தான் தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைகளை வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் ஒரு மாதத்திற்கான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்; அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் இரண்டாவது முறையாக தலா ரூ.1,000 உதவியாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
அத்துடன் பாமக ஏற்கெனவே வலியுறுத்தியவாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஊரடங்கு காலத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இலவச உணவுப் பொருட்களுடன், கூடுதலாக வாரத்திற்கு ரூ.1,000 வீதம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். வாழ்வாதாரம் இழந்த மக்கள் பசியின்றி வாழ இது அவசியமாகும். இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் அரசும், பொதுமக்களும் இணைந்து பணியாற்றி, தமிழ்நாட்டை கரோனா நோய் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும்" என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT