Published : 13 Apr 2020 05:49 PM
Last Updated : 13 Apr 2020 05:49 PM
தடையின்றி உணவுப் பொருட்கள் கிடைக்க, வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தினார்.
மதுரையில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக 2-வது நாளாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.
அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க, தொழில் வர்த்தக சங்க பிரதிநிதிகளுடனும் அமைச்சர் ஆலோசனை செய்தார்.
மூத்த ஐஏஎஸ் அதிகாரி காமராஜ், ஆட்சியர் டி.ஜி.வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன், காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், எஸ்.பி மணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதன்பின், அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
ஊரடங்கு அமலில் இருந்தாலும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி வழங்கப்படுகின்றன. முதல்வரின் உத்தரவுப்படி, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் உட்பட 26 சங்கங்களின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினேன்.
மதுரையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு உணவுப் பொருட்கள், பழங்கள் உள்ளிட்டவை கொண்டு செல்லப்படுகின்றன.
மற்ற மாவட்டங்களிலும் இருந்து மிளகாய் போன்ற பொருட்கள் மதுரைக்கு வருகின்றன. பங்கேற்ற சங்க நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். முதல்வரின் கவனத் எடுத்துச் சென்று தீர்வு காணப்படும்.
தற்போதைய சூழலில் மக்கள் உயிரைக் காப்பது முதல் பணி. ஏழை மக்கள் பாதிக்காமல் உணவுப்பொருட்களை வழங்க வேண்டும் என, முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். இது வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. பொருட்களை வாங்க வருவோர் சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும்.
தொழில் வர்த்தக சங்கம், உணவுப்பொருட்கள் சங்கம், மருந்து விற்பனை செய்யும் சங்கம், அரிசி ஆலை சங்கங்கள் அரசுக்கு நல் ஒத்துழைப்பு அளிப்போம். முதல்வரின் அறிவுரைகளைப் பின்பற்றுவோம் என உறுதியளித்துள்ளனர்.
கரோனாவை தடுக்க அரசு நடவடிக்கை எல்லாம் மக்களின் நன்மைக்காக என்பதை உணர்ந்து ஒத்துழைக்க வேண்டும்.
தன்னார்வலர்கள் உதவி செய்ய தடை அல்ல. அரசுஅதனை வரைமுறைப்படுத்தி உள்ளது.
மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து தன்னார்வலர்கள் செயல்பட வேண்டும். புயல், வெள்ளம் போல் உதவிடும் காலமல்ல.
நோய்த்தொற்று அதிகரித்துவிடக்கூடாது என பொதுசுகாதார நிறுவனம் அறிவித்தபடியே முதல்வரும் அறிவித்துள்ளார்.
கரோனா பரிசோதனை ‘ரேபிட் கிட்’ வராததால் பணி தாமதிக்கவில்லை. அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களால் கைவிடப்பட்ட தலைவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள அறிக்கை விடுகின்றனர். மக்கள் அவர்களை விரும்பமாட்டார்கள். முதல்வர் தலைமையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கிறோம். விமர்சனம் செய்யவோ, விவாதிக்கவோ நேரமில்லை. முதல்வரின் நடவடிக்கைகளுக்கு மக்கள் நல்ல தீர்ப்பு அளிப்பர்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
முன்னதாக தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில், அதன் தலைவர் ஜெகதீசன், முன்னாள் தலைவர் ரத்தினவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் முதல்வரின் பொது நிவாரண நிதியாக ரூ. 31 லட்சத்துக்கான வங்கி கசோலையை அமைச்சர் ஆர்பி.உதயகுமாரிடம் வழங்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT