Published : 13 Apr 2020 05:16 PM
Last Updated : 13 Apr 2020 05:16 PM
தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் அமைப்பினர் நேரடியாகப் பொதுமக்களுக்கு நிவாரண உதவி அளிக்கக்கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளதை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரடியாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள், ஆதரவற்றோருக்கு தன்னார்வலர்கள் , அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் நிவாரணம் வழங்கி வருகின்றனர். இதற்குத் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
நிவாரணப் பொருளை அரசு அதிகாரிகள் மூலம் வழங்கலாம் எனத் தமிழக அரசு தெரிவித்தது. திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், தன்னார்வலர்கள் உதவி செய்யத் தடையில்லை, வழிமுறையை மட்டும் மாற்றியுள்ளோம் என தமிழக அரசு விளக்கம் அளித்தது.
அதை ஏற்றுக்கொள்ளாத வைகோ உயர் நீதிமன்றத்தில் நேரடியாக வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இதுகுறித்து மதிமுக தலைமை நிலையம் வெளியிட்ட அறிக்கை:
“கரோனா கொள்ளை நோய் கொடூர பாதிப்பிலிருந்து கோடிக்கணக்கான மக்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கத்தால் மட்டும் இயலாது. அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், பொதுநல ஆர்வலர்கள் மனிதாபிமானத்துடன் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள், அவசரகால உதவிகள் ஆகியவற்றை நேரடியாகக் கொடுப்பதைத் தடுக்கும் நோக்கத்தோடு, நேற்றைய தினம் தமிழக அரசு ஒரு அறிவிப்பைச் செய்தது.
பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பின் விளைவாக தமிழக அரசு இன்று மழுப்பலான ஒரு அறிக்கையை வெளியிட்டு, அரசாங்கத்தின் மூலமாகத்தான் உதவ வேண்டும் என்ற நோக்கத்தையும் மறுபடியும் வெளிப்படுத்தியுள்ளது.
எனவே, மேற்கூறிய நடவடிக்கைகளை ரத்து செய்யுமாறு மதிமுகப் பொதுச்செயலாளர் வைகோ , தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கும், வருவாய்த் துறைச் செயலாளருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
அத்துடன் தமிழக அரசின் நடவடிக்கைக்கு தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றப் பதிவுத் துறையிடம் முறையிட்டுள்ளார். வழக்கு விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது”.
இவ்வாறு மதிமுக தலைமை நிலையம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT