Published : 13 Apr 2020 04:46 PM
Last Updated : 13 Apr 2020 04:46 PM

ஊரடங்கால் அம்மாவின் மரணத்துக்கு வரமுடியாத மகன்: ட்விட்டரில் தமிழக முதல்வர் ஆறுதல்

ஊரடங்கால் வெளிநாட்டிலிருந்து அம்மாவின் மரணத்துக்கு வரமுடியாத மகனுக்கு ட்விட்டர் தளத்தில் தமிழக முதல்வர் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு அறிவித்துள்ள 21 நாட்கள் ஊரடங்கு நாளை (ஏப்ரல் 14) முடிவுக்கு வருகிறது. இதர மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், தமிழகத்திலும் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கால் தினசரி தொழிலாளர்கள் மட்டுமன்றி அவசர தேவைக்கு பக்கத்துக்கு ஊருக்குக் கூட செல்ல முடியாமல் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுடைய தேவைகள் அனைத்துமே சமூக வலைதளங்கள் மூலமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இதனிடையே, வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் தனது அம்மாவின் மரணத்துக்குக் கூட வரமுடியாதவனாக இருக்கிறேன் என்று தனது சோகத்தை ட்விட்டர் பதிவில் "என்னோட அம்மா இறந்து விட்டார்கள். ஆனா அவங்க இறுதி முகத்தைப் பார்க்கக் கூட முடியதவனாக இருக்கிறேன். வாழ்கையில் எந்த மகனுக்கு இப்படி நிகழ்வு நடக்க கூடாது..! அம்மா" என்று பதிவிட்டு இருந்தார். இந்தப் பதிவில் அவர் தமிழக முதல்வர் உள்ளிட்ட யாருடைய ட்விட்டர் கணக்கையும் குறிப்பிடவில்லை.

இவருக்கு ஆறுதல் கூறும் விதமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இவரது ட்வீட்டைக் குறிப்பிட்டு தனது ட்விட்டர் பதிவில் "மிகுந்த வருத்தமும் மனவேதனையும் அளிக்கிறது தம்பி. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்களும் தங்கள் தந்தையும் மனோதைரியத்துடன் இருங்கள்." என்று குறிப்பிட்டுள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x