Published : 13 Apr 2020 04:05 PM
Last Updated : 13 Apr 2020 04:05 PM
தளர்ந்த வயதிலும் விடாமல் முயன்று கரோனா நிவாரணத்துக்கு ரூ.3 ஆயிரத்தை காசோலையாக மாற்றி புதுச்சேரி முதல்வர் அலுவலகத்தில் 85 வயது மூதாட்டி தையல்நாயகி அளித்தார்.
கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக செலவு செய்யும் வகையில் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தரப்பிலிருந்து நிவாரண நிதி தர வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கோரியிருந்தார்.
அதன்படி பல்வேறு நிறுவனங்கள், மாணவர்கள் எனப் பலரும் நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த பண உதவியை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று புதுச்சேரி கோவிந்த சாலை பகுதியைச் சேர்ந்த 85 வயதான மூதாட்டி தையல்நாயகி, கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தனக்கு வந்த முதியோர் உதவித் தொகை 3,000 ரூபாயை அளிக்க புதுச்சேரி சட்டப்பேரவைக்கு பல்வேறு தடைகளையும் தாண்டி தனது மகள், பேரனுடன் வந்தார்.
காசோலையாக தந்தால்தான் பெறுவார்கள் என்பது தெரியாததால் பணமாக எடுத்து வந்திருந்தார். அதையடுத்து அவர் திரும்பிச் சென்றார்.
அதைத் தொடர்ந்து தளர்ந்த வயதிலும் ரூ.3 ஆயிரத்தை காசோலையாக மாற்றி மீண்டும் முதல்வர் அலுவலகத்துக்கு இன்று (ஏப்.13) காலை வந்து நிவாரணத்துக்காக ஒப்படைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT