Published : 13 Apr 2020 03:08 PM
Last Updated : 13 Apr 2020 03:08 PM

அம்பேத்கர் பிறந்த நாள்; அனைத்துலக சமத்துவ நாள்; சமத்துவம் வென்றெடுக்க உறுதியேற்போம்: திருமாவளவன்

திருமாவளவன்: கோப்புப்படம்

சென்னை

அம்பேத்கர் பிறந்த நாள் அன்று, சமத்துவம் வென்றெடுக்க உறுதியேற்போம் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, திருமாவளவன் இன்று (ஏப்.13) வெளியிட்ட அறிக்கையில், "மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சிதான் மக்களாட்சி என்று முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் மக்களாட்சி குறித்து ஒரு வரையறையைக் கூறினார்.

அத்தகைய மக்களாட்சி முறைதான் நமது நாட்டிலும் நடைமுறையில் உள்ளதெனவும் பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் மூலம் இங்கே நாடாளுமன்ற ஜனநாயகம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறதெனவும் நாம் நம்புகிறோம். ஆனால், இங்கே அத்தகைய மக்களாட்சி மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகம் நடைமுறையில் உள்ளதா என்னும் கேள்வி இயல்பாகவே எழுகிறது! அந்த அளவுக்கு நமது சமூகக் கட்டமைப்பும் அரசியலமைப்பும் முரண்பட்டவையாக உள்ளன.

"ஒரு சமூகத்தில் உள்ள தனிநபர்கள் தனித்தனி வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தால் ஒவ்வொரு வகுப்பும் மற்ற வகுப்புகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் ஒவ்வொரு தனிநபரும் தன்னுடைய விசுவாசம், வேறெதையும் விட முதன்மையாக தனது வகுப்புக்கே தரப்பட வேண்டும் என்று நினைத்தால்; தன்னுடைய வகுப்பின் நலனை மற்ற வகுப்புகளின் நலன்களுக்கு மேலாகக் கருதினால் தன்னுடைய சாதியின் நலனை முன்னேற்றுவதற்காக சட்டத்தை நீதியை வக்கிரமாகப் பயன்படுத்தினால் வாழ்வின் எல்லாத்துறைகளிலும் எப்போதும் பாரபட்சத்துடன் செயல்பட்டால் அது மக்களால் நடத்தப்படும் மக்களரசாக இருந்தாலும், ஒருபோதும் மக்களுக்காக நடக்கும் அரசாக இருக்க முடியாது" என்று இங்குள்ள சமூகநிலை குறித்தும் அரசியல் நிலை குறித்தும் தெளிவுபடக் கூறியுள்ளார் அம்பேத்கர். அந்த வகையில் பார்த்தால், இங்கே நடப்பது மக்களுக்கான அரசு இல்லை என்பதை நம்மால் உணர முடியும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும்போது அதன் அடிப்படைக்கூறுகளாக சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அம்பேத்கர் முன்வைத்தார். இதில், சமத்துவம் என்ற கருத்தாக்கத்தை இந்திய சமூகத்தில் புத்தர் மட்டுமே வலியுறுத்தி வந்தார்.

ஆனால், பௌத்தம் அழிக்கப்பட்டபோதே சமத்துவம் என்கிற மகத்தான தத்துவமும் இந்தியச் சமூகத்திலிருந்து முற்றிலும் துடைத்தெறியப்பட்டது. அதன் பின்னர், அம்பேத்கர்தான் அக்கோட்பாட்டுக்கு மீள் உயிர்ப்பைத் தந்தவர்.

எனினும், இன்றும் பிறப்பின் அடிப்படையில் உயர்வு-தாழ்வைத் தமது அடிப்படைக் கொள்கையாக வைத்திருப்பது உலகிலேயே வைதீக மதமென்னும் இன்றைய இந்து மதம் மட்டும்தான். வருண பாகுபாடு, சாதிய பாகுபாடு, தீண்டாமை உள்ளிட்ட சாதிய வன்கொடுமைகள், சதி வழக்கம் உள்ளிட்ட ஆணாதிக்க ஒடுக்குமுறைகள் போன்றவை இன்றும் இந்து மதத்தின் பண்புக்கூறுகளாக இருப்பதைக் காணலாம்.

இத்தகைய பிற்போக்கான பழமைவாத நம்பிக்கைகளே காலம் காலமாகத் தொடர்ந்து வல்லாதிக்கம் செய்துகொண்டிருந்த சமத்துவமில்லாத இச்சமூகக் கட்டமைப்பில், அதன் ஆணிவேரையே அசைத்து, மெல்ல மெல்ல அதனைத் தகர்த்தெறியும் வகையில், அரசமைப்புச் சட்டத்தின் மூலம் இங்கே சமத்துவம் என்பதைச் சட்டபூர்வமாக்கியவர் அம்பேத்கர்.

அதன்படி ஒரு புதிய இந்தியாவை சமத்துவ இந்தியாவை ஜனநாயக இந்தியாவைக் கட்டமைத்திட வலுவான அடித்தளம் அமைத்துள்ளார் அம்பேத்கர்.

அரசியலமைப்புச் சட்ட அவையில் இறுதியாக உரையாற்றும்போது, வயது வந்தோருக்கு வாக்குரிமை என்பதன் மூலம் அரசியல் தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் சமத்துவத்தை, சமூக - பொருளாதார தளங்களுக்கும் விரிவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் அம்பேத்கர். ஆனால், இன்று சாதிய மதவாத சக்திகளோ அவர் அறிமுகப்படுத்திய அரசியல் சமத்துவத்தையும்கூட கொஞ்சம் கொஞ்சமாகப் பறித்து வருகின்றனர்.

குறிப்பாக, ஜம்மு- காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு உரிமைகளைப் பறித்ததோடு, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து சமத்துவம் குறித்த அரசியலமைப்புச் சட்டத்தின் பதினான்காவது உறுப்பின் மீது கொடுந்தாக்குதலைத் தொடுத்துள்ளனர்.

இத்தக்கய நெருக்கடியான சூழலில், அம்பேத்கரால் வகுத்தளிக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் உயிர்நாடியாக விளங்குகின்ற சமத்துவம் என்ற கருத்தாக்கத்தைக் காப்பாற்ற வேண்டியது நமது உடனடிக் கடமையாக உள்ளது. ஆகவே, அம்பேத்கரின் பிறந்தநாளை இந்த ஆண்டு நாம் சமத்துவ நாளாகக் கடைபிடிப்போம்.

இந்தத் தருணத்தில் அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு எண் -14-ஐ நாம் அனைவரும் உரக்கப் படித்து, அதனை உறுதிமொழியாக ஏற்போம்!

"இந்திய அரசானது தனது ஆட்சிப் பரப்புக்குள் சட்டத்தின் முன்னால் சமத்துவத்தையும், சட்டங்கள் அளிக்கும் பாதுகாப்பில் சமத்துவத்தையும் எவர் ஒருவருக்கும் மறுத்தல் ஆகாது என, இந்திய அரசமைப்புச் சட்டம், உறுப்பு எண்-14 வழங்கும் மேற்கண்ட சமத்துவ உரிமையைச் சிதைக்கும் முயற்சிகளை முறியடித்து அதனைப் பாதுகாக்கவும்; இச்சட்டத்தின் மூலம், பிறப்பின் அடிப்படையிலான உயர்வு-தாழ்வைத் தகர்த்து, இங்கே சமத்துவத்தை நிலைநாட்டவும் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல்-14 இன்று, விடுதலைச் சிறுத்தைகள் யாவரும் உறுதியேற்போம்!

தற்போதைய சூழலில், கரோனா வைரஸின் பரவலைத் தடுக்கும் வகையில் தேசம் தழுவிய ஊரடங்கு ஏபரல் 14 வரையிலும் நடைமுறையில் இருப்பதால், அவரவர் இல்லங்களிலிருந்தவாறே அம்பேத்கரின் உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தி சமத்துவ நாள் உறுதிமொழியை ஏற்க வேண்டும்" என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x