Published : 13 Apr 2020 02:49 PM
Last Updated : 13 Apr 2020 02:49 PM
கொடைக்கானலில் சுற்றுலாபயணிகள் வருகை மட்டுமின்றி, உள்ளூர் மக்களின் நடமாட்டம் மற்றும் போக்குவரத்து
முற்றிலும் இல்லாததால் காட்டுமாடு, யானை, மயில், குரங்குகள் நடமாட்டம் பொது இடங்களில் அதிகம் காணப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் குரங்கு, காட்டுமாடு, மான், யானை என பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன.
அவ்வப்போது சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு வந்துசெல்லும் இவை, தற்போது ஆட்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து குறைவு காரணமாக பொது இடங்களில், சாலைகளில் உலாவருகின்றன.
ஏற்கெனவே ஊரடங்கு உத்தரவு காரணமாக கொடைக்கானல் அருகேயுள்ள பேத்துப்பாறை கிராமப்பகுதியில் மக்கள் வீ்ட்டைவிட்டு வெளியே வராதநிலையில், யானைகள் நடமாட்டம் கிராமப்பகுதியில் அதிகம் காணப்படுகிறது.
இதனால் யாரும் வீட்டைவிட்டு வெளியில்வரவேண்டாம் என வனத்துறையினர் குழாய் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
போக்குவரத்து இல்லாததால் மலைச்சாலையை அவ்வப்போது யானைகள் கடந்துசெல்கின்றன. இரவில் மலைகிராமத்திற்கு வந்துசெல்கின்றன.
குரங்குகள் சாலையிலேயே முகாமிட்டுள்ளன. மக்கள் நடமாட்டம், வாகனபோக்குவரத்து இருந்த இடங்களில் மயில், மான்கள் அதிகம் காணப்படுகின்றன.
காட்டுமாடுகள் எண்ணிக்கை கொடைக்கானல் மலைப்பகுதிகளில் அதிகம் உள்ளநிலையில், இவை கொடைக்கானல் நகரின் பிரதான சாலைகளான அண்ணாசாலை, கான்வென்ட்ரோடு, பேருந்துநிலையம் போன்ற பகுதிகளில் உலாவருது தினமும் நடைபெறுகிறது.
வாகனங்களால் ஏற்படும் புகைமாசு குறைந்தும், சுற்றுலாபயணிகளால் ஏற்படும் பிளாஸ்டிக் குப்பைகள் இன்றியும் இயற்கைக்கு முழுமையாக திரும்பிவருகிறது கொடைக்கானல் மலைப்பகுதி. மலைப்பகுதியை முழுமையாக பயன்படுத்த தொடங்கிவிட்டன வனவிலங்குகள் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.
கொடைக்கானல்- வத்தலகுண்டு மலைச்சாலையில் முகாமிட்டுள்ள குரங்குகள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT