Published : 13 Apr 2020 02:45 PM
Last Updated : 13 Apr 2020 02:45 PM

டிஎன்பிஎஸ்சி தலைவராக ஐஏஎஸ் அதிகாரி கா.பாலச்சந்திரன் நியமனம்; கடந்து வந்த பாதை

ஐஏஎஸ் அதிகாரி கா.பாலச்சந்திரனை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக ஆட்சிப் பணிக்கான ஊழியர்களை, அரசு ஊழியர்களைத் தேர்வு செய்யும் குரூப் 1, குரூப்.2, 2(ஏ), குரூப் 4 உள்ளிட்ட பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்குப் பணியாளர்களைத் தேர்வு செய்யும் பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் பெரும் சர்ச்சையில் சிக்கியது. இதில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் சிலர் சிக்கினர். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

ஏற்கெனவே, டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்த அருள்மொழி ஐஏஎஸ் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் புதிய தலைவர் நியமனம் தேவைப்பட்டது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவராக ஐஏஎஸ் அதிகாரி கா.பாலச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அவர் கடந்து வந்த பாதையையும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

கா.பாலச்சந்திரன் கடந்து வந்த பாதை

கா.பாலச்சந்திரன் தஞ்சாவூரில் பிறந்தவர். தந்தை (மறைந்த) காசி அய்யா, தாயார் லட்சுமி. தந்தை வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை தஞ்சாவூரில் முடித்து பழனி துணை ஆட்சியராக 1986 ஆம் ஆண்டு பணிபுரியத் தொடங்கினார்.

1994-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் தமிழ்நாடு பிரிவில் நியமனம் செய்யப்பட்டார். 2000-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை தருமபுரி, கன்னியாகுமரி, ஈரோடு, விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் ஏழு ஆண்டுகள் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவராகப் பணிபுரிந்தார்.

தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவராகப் பணிபுரிந்த போது 2000-ம் ஆண்டு சிறு சேமிப்புத் துறையில் சாதனை படைத்தமைக்காக சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவர் விருதும், பாராட்டும் பெற்றார். ஈரோடு மாவட்டத்தில் பணிபுரிந்தபோது 2003-ம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் துறையில் சாதனை படைத்தமைக்காக சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவருக்கான விருதும் பாராட்டும் பெற்றார்.

சமூக நலத் துறை, வேளாண்மைத் துறை, உள்ளாட்சித் துறை, உணவு மற்றும் பாதுகாப்புத் துறை, கூட்டுறவுத் துறை, தொழில் துறை, காதி போர்டு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தொழிலாளர் நலத் துறை ஆகிய துறைகளின் தலைவராகப் பணியாற்றியவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக வணிக வரி மற்றும் பதிவுத் துறையில் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வந்தார்.

2018-ம் ஆண்டு பதிவுத் துறையில் முதல்வர் "நல் ஆளுமை விருதும்" 2019-ம் ஆண்டு வணிகவரித் துறையில் முதல்வர் "நல் ஆளுமை விருதும்" பெற்றவர்.. சிறப்பாகச் செயலாற்றும் திறனுடைய இவர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராகப் பணியேற்றுள்ளார்.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x