Last Updated : 13 Apr, 2020 01:27 PM

 

Published : 13 Apr 2020 01:27 PM
Last Updated : 13 Apr 2020 01:27 PM

ஊரடங்கின்போது வழக்கில் சிக்கியோர் தடையில்லா சான்று பெறுவதில் சிக்கல்; தேவையின்றி வெளியில் வருவதைத் தவிர்க்கவும்: காவல்துறை வேண்டுகோள் 

மதுரை

ஊரடங்கின்போது வழக்கில் சிக்கியயோர் தடையில்லா சான்று பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் எதிர்காலத்தை நினைத்து இளைஞர்கள் தேவையின்றி வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும் என காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கை அமல்படுத்துவதில் மதுரையில் போலீஸார் இரவு, பகல் பாராமல் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சாலைகள் வெறிச்சோடியதால் இளைஞர்கள் பலர் ஜாலியாக சுற்றுகின்றனர். வேறு வழியின்றி அத்தியவாசியப் பொருட் கள் வாங்குவோர் தவிர, தேவையின்றி வாகனங்களில் சுற்றும் இளைஞர்கள் மீது பொது ஊடரங்கை மீறுதல் (சட்டப் பிரிவு 188), கொள்ளை நோயைப் பரப்புதல் வகையில் கவனக்குறைவுடன் நடப்பது (ச-பி 269), நோயைப் பரப்பும் நோக்கில் அலட்சியம் செய்தல் (ச-பி 270) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கின்றனர்.

இந்நிலையில் தென்மண்டலத்தில் மதுரை புறநகர், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை புறநகர், நாகர்கோவில், தென்காசி மாவட்டங்களில் நேற்று வரை 26,948 வழக்குகளும், 22, 418 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 30,295 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை நகரில் மட்டும் ஊரடங்கை மீறியதாக 2,944 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 3,119 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3,808 வாகனங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.

வழக்குகளில் சிக்கிய பெரும்பாலானோர் படித்த இளைஞர்கள். உடனே காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டாலும், இவர்கள் மீதான வழக்கு நிலுவையில் இருக்கும்.

இதனால், அரசு, தனியார் வேலைக்குச் செல்லும் போது, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் வழக்கு இல்லா (என்ஓஜி) சான்றிதழ் பெற இயலாது. வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட் பெறுவதிலும் சிக்கல் ஏற்படும்.

இது போன்ற நடைமுறை சிக்கல்களை மனதில் கொண்டு ஊரடங்கு காலத்தில் இளைஞர்கள் தேவையின்றி வெளியில் சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும் என, காவல்துறையினர் எச்சரிக்கின்றனர்.

தென்மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரன் கூறுகையில், ‘‘ தென் மண்டலத்தில் ஊடரங்கை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஊரடங்கின்போது, கரோனா வைரஸ் குறித்து டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியோர், தேவையின்றி கூட்டம் கூடியது, மஞ்சுவிரட்டு நடத்தியது உட்பட பிற புகார்கள் குறித்து 200க்கும் மேற்பட்ட வழக்குகளும் பதிவு செய்துள்ளோம்.

விதிமீறல்களில் சிக்கி கணினி மூலம் அபராதம் செலுத்தினாலும், வழக்கு நிலுவையில் இருக்கும் வரை சிக்கல் உருவாகலாம். எதிர்கால நலன் கருதி இளைஞர்கள் வெளியில் வருவதை தவிர்க்கவேண்டும்,’’என்றார்.

மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மதுரம் கூறியது:

ஏற்கெனவே காவல் துறையில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. ஊடரங்கின் போது, பதிவாகும் வழக்குகள் தொடர்பாக விரைந்து குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வது கடினம். வாய்தாவுக்கு தொடர்ந்து அலையவேண்டும். அனைத்து வழக்குகளும் வலைப்பின்னல் திட்டத்தில் (சிசிடிஎன்எஸ்) ஒருங்கிணைக்கப்படுகிறது.

குறுக்கு வழியில் யாரும் தடையில்லா சான்றிதழ் பெற முடியாது. கணினிமயமாக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை துரிதமாக முடிக்க முடியாது.

வரிசைப்படியே வழக்கை சந்திக்க முடியும். மேலும், கரோனா தொற்று இருக்கும் நபர்கள் தேவையின்றி வெளியில் வந்தால் அவர்களை பரிசோதிக்கும் காவல்துறையினரை பாதிக்கும், எனவே படித்த இளைஞர்கள் எதிர்காலத்தை நினைத்து, தேவையின்றி போலீசில் சிக்குவதைத் தவிர்க்கவேண்டும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x