Published : 13 Apr 2020 12:09 PM
Last Updated : 13 Apr 2020 12:09 PM
கரோனா சூழலில் மக்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ள சூழலில் அரிசியில் மீண்டும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி- முதல்வர் நாராயணசாமி இடையே மோதல் எழுந்துள்ளது. கிரண்பேடி தொடர்பாக பிரதமர் மோடியிடம் நாராயணசாமி புகார் தெரிவித்துள்ளார். அவர் பொய் சொல்வதாக கிரண்பேடி பதில் அனுப்பியுள்ளார்.
புதுச்சேரியில் யாருக்கு அதிகாரம் என்ற சர்ச்சை துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையில் நீடித்து வருகிறது. தொடர்ந்து வார இறுதி நாட்களில் கிரண்பேடி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்தி வருவார். அதற்கு முதல்வர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவிப்பார்.
கரோனா அச்சுறுத்தல் எழுந்த பின்னர் முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்து ஆய்வுப் பணிகளையும் கூட்டங்களையும் நடத்தத் தொடங்கினர்.
அதே நேரத்தில், "துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆய்வுக்குச் செல்வதில்லை. ராஜ்நிவாஸை விட்டு வெளியே வருவதில்லை" என்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவும் புகார் தெரிவிக்கும் சூழலும் உருவானது. ஆனால், அதற்கு கிரண்பேடி பதில் தரவில்லை.
இந்நிலையில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் முதல்வர் நாராயணசாமி கிரண்பேடி பற்றி தொலைபேசியில் புகார் தெரிவித்துள்ளார். "புதுச்சேரியில் சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களான ஏழை மக்களுக்கு அரிசி, பருப்பு தரப்படுவதுபோல், மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் (வருமான வரிசெலுத்துவோர், அரசு ஊழியர்கள் தவிர்த்து) அரிசி, பருப்பு தருவதை ஆளுநர் கிரண்பேடி தடுத்து நிறுத்த வேலை செய்வதால் நீங்கள் தலையிட வேண்டும்" என்று தொலைபேசியில் தெரிவித்துள்ளதாக முதல்வர் நேற்று இரவு குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது வாட்ஸ் அப்பில் இன்று (ஏப்.13) பதிவிட்டுள்ளதாவது:
"முதல்வர் நாராயணசாமி மீண்டும் பொய் கூறியுள்ளார். வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்கு அரிசி, பருப்பு வழங்க ஏற்கெனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டன. வறுமைக்கோட்டுக்கு மேல் வாழும் மக்களுக்கும் அரிசி வழங்க வேண்டும் என எம்எல்ஏக்கள் வலியுறுத்தியுள்ளதால் இந்தக் கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது.
இது தொடர்பான எந்தக் கோப்பும் ஆளுநர் அலுவலகத்தில் இல்லை. இவ்விஷயத்தில் ஆளுநர் எங்கு வந்து தலையிட்டார்? புதுவை முதல்வர் தொடர்ந்து பொய் கூறுவது துரதிர்ஷ்டவசமானது. இதன் மூலம் முதல்வர் பதவியின் மீதான மரியாதையையும், நம்பிக்கையையும் சீர்குலைத்து வருகிறார்.
மக்களின் ஆரோக்கியம், பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கை எடுக்கும்போது நம்பிக்கையையும் தக்கவைப்பது அவசியம். உண்மையான நிலை குறித்து மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது".
இவ்வாறு கிரண்பேடி பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT