Published : 13 Apr 2020 11:36 AM
Last Updated : 13 Apr 2020 11:36 AM

கர்ப்பிணி மனைவியின் நிலையைக் கூறி ட்விட்டரில் உதவி கேட்ட இளைஞர்: நம்பிக்கை கொடுத்த முதல்வர் பழனிசாமி

தனது கர்ப்பிணி மனைவியின் நிலை குறித்து கேள்வி எழுப்பியவருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு அறிவித்துள்ள 21 நாட்கள் ஊரடங்கால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கிறார்கள். இந்த ஊரடங்கால் தினசரித் தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும், வெளிமாநிலத் தொழிலாளர்கள் பலரும் வெவ்வேறு மாநிலங்களில் பணியில் இருப்பதால் அவர்களும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுடைய தேவைகள் அனைத்துமே சமூக வலைதளங்கள் மூலமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதற்காக அந்தந்த மாநில முதல்வர்களின் ட்விட்டர் கணக்குகள் எப்போதுமே செயல்பாட்டில் உள்ளன.

தமிழக முதல்வரின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டுக் கேட்கப்படும் உதவிகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இன்று (ஏப்ரல் 13) காலை தனது கர்ப்பிணி மனைவி குறித்து தமிழக முதல்வரின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு, "சார், தயவுசெய்து ஒரு நாளாவது கேப் கொடுங்கள் ப்ளீஸ். என் மனைவி 9 மாத கர்ப்பமாக இருக்கிறார். அவளுடன் யாருமே இல்லை. நான் பக்கத்து மாவட்டத்தில் மாட்டிக் கொண்டேன். முதல் குழந்தை வேறு. தனியாக எப்படிச் சமாளிப்பாள். 108க்கு கால் பண்ணாலும் கூட யாராவது இருக்கணும். பாஸுக்கு அப்ளை பண்ணினேன். அதற்கு பதில் இல்லை. முக்கியமான மேட்டர் இல்லையா" என்று கேள்வி எழுப்பினார்.

அவருக்குப் பதிலளிக்கும் விதமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "உடனடியாக தங்களைத் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்ணைத் தெரிவிக்கவும் தம்பி. நிச்சயமாகத் தாயையும், சேயையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x