Published : 13 Apr 2020 11:22 AM
Last Updated : 13 Apr 2020 11:22 AM
கரோனா அச்சத்துக்கு நடுவே நீலகிரி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைக் கட்டாயமாக வேலை செய்யச் சொல்லி நிர்பந்திக்கும் எஸ்டேட் நிர்வாகங்கள் பற்றி தொடர்ந்து செய்திகள் வெளியாகிவருகின்றன. இருந்தும், ‘இப்போது வரவில்லை என்றால், எப்போதும் வேலை கிடையாது’ என அச்சுறுத்தியே தேயிலைத் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களிடம் ஒப்புதல் கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு பணிக்கு அனுமதிக்கிறது எனும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கோரி, தமிழக முதல்வர் வரை மனு அனுப்பப்பட்டிருக்கிறது.
அத்தியாவசியப் பணிகள் என்ற அடிப்படையில் நீலகிரி தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்ட நிர்வாகம் (டான் டீ) தொழிலாளர்களிடம் கரோனா தொற்று உறுதிமொழி வாங்கிக்கொண்டு எஸ்டேட்டிற்குள் அனுமதித்துள்ளது. அந்த உறுதிமொழிப் படிவத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
''வேளாண் விவசாயத் தொழில் மற்றும் அத்தியாவசிய உணவு உற்பத்தி சார்ந்த தொழில்களில், வைரஸ் தொற்று ஏற்படா வண்ணம் பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளித்து தொழிலாளர்களைப் பணியில் ஈடுபடுத்தலாம் என்ற நீலகிரி மாவட்ட ஆட்சியரின் உத்தரவு சொல்கிறது.
Rc.PC. F2/2020 நாள் 29.03.2020-ன் படி அதில் விதித்துள்ள பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி அவர்கள் பணிக்குச் செல்வதற்கு முன்பாக உரிய மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளவும், சமூக இடைவெளியைப் பேணி அவர்களைப் பணியில் ஈடுபடுத்தவும், தொழிலாளர்கள் தங்களின் கைகளைக் கழுவி தூய்மையினைப் பேணுவதை உறுதிசெய்யவும், தொழிலாளர்களின் குடியிருப்புகளைச் சுற்றிலும் கிருமி நாசினி தெளித்து தூய்மையைப் பராமரிக்கவும் அரசின் வழிகாட்டுதல்படி அவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிடவும் மேற்கண்ட அதே நடைமுறைகளோடு அரசு விதித்துள்ள அனைத்துப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி தேயிலைத் தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
தொழிலாளர்கள் பணிக்குச் செல்லும் நுழைவு பகுதியிலும், பணி முடித்து வெளியில் செல்லும் இடங்களிலும் கைகளைத் தூய்மைப்படுத்த தேவையான வசதிகள் செய்து தரப்படும் எனவும் நிர்வாகத்தின் தரப்பில் உறுதியளிக்கப்படுகிறது''.
இவ்வாறு அந்த உறுதிமொழிப் படிவத்தில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், தொழிலாளர்கள் உறுதிமொழி படிவத்தில், ''மாவட்ட ஆட்சியர் /அரசு விதித்துள்ள பாதுகாப்பு நடைமுறை நிபந்தனைகளைப் பின்பற்றி தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்ய போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்ற நிர்வாகத் தரப்பின் உறுதிமொழியினை ஏற்று, எவ்வித வற்புறுத்தலுக்கும் கட்டாயத்துக்கும் ஆட்படாமல் எனது சுய விருப்பத்தின் பேரில் பணிக்குச் செல்ல சம்மதம் தெரிவிக்கின்றேன்.
என்னால் பிறருக்கும், பிறரால் எனக்கும் கரோனா வைரஸ் தொற்று ஏற்படாவண்ணம் அரசும் நிர்வாகமும் வகுத்துக்கொடுத்துள்ள பாதுகாப்பு நடைமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்றக் கடமைப்பட்டவன் என்பதை அறிவேன்’ எனும் வாசகங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த உறுதிமொழிகளை ஏற்று தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நீலகிரி டான் டீ எஸ்டேட்டுகளில் வேலை செய்யத் தொடங்கியுள்ளார்கள்.
இந்த நிலையில், “எஸ்டேட் நிர்வாகம் குறிப்பிட்டபடி தேயிலை எஸ்டேட் பணிகளில் கரோனா தடுப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. கரோனா பீதிக்கு மத்தியிலேயே அவர்கள் அங்கே பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்” என்று தேயிலைத் தோட்டத் தொழிலாளர் விவசாய சங்கங்கள் புகார் தெரிவித்து வருகின்றன.
இதன் உச்சகட்டமாகத் தமிழக முதல்வருக்கும் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம், மாவட்டச் செயலாளர் விஜயசிங்கம், தங்கச்சன் ஆகியோர் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில், ''கரோனா வைரஸ் பரவாமல் இருக்க மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாக்க வீட்டுக்குள்ளேயே இருக்க வைக்க மத்திய மாநில அரசுகள் பெரும் முயற்சி எடுத்து வருகின்றன. ஆனால், தோட்டத் தொழிலாளர்கள் மட்டும் வேலைக்குச் செல்ல வேண்டும் என்பது எந்த அளவுக்குப் பாதுகாப்பானதாக இருக்கும் என்று வினா எழுகிறது.
சுய விருப்பத்தின் பெயரில்தான் வேலைக்குச் செல்கிறோம் என தோட்ட நிர்வாகத்தால் அச்சடிக்கப்பட்ட கடிதத்தில், ஒவ்வொரு தொழிலாளியையும் கையெழுத்திட்டு கொடுக்கச் சொல்லுவது எப்படி சரியானதாகும்? அரசு வழிகாட்டியுள்ள ‘கோவிட்-19’ பாதுகாப்பு உத்தரவுகள் எதுவும் அரசு தேயிலைத் தோட்ட கழக நிர்வாகத்தால் பின்பற்றப்படவில்லை என்பதைத் தங்களது கவனத்திற்குக் கொண்டுவருகின்றோம்.
தேயிலைத் தொழில் என்பது தொழிலாளர்கள் கூட்டாகச் செய்யும் பணியாகும். ஆகவே ‘கோவிட்-19’ தொற்றுநோய் முற்றாகத் தடுக்கப்படும் வரை தொழிலாளர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுமுறையளித்து வீட்டுக்குள்ளேயே அவர்கள் இருக்க அரசு உதவ வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நெருக்கடியான இந்த நேரத்தில், செய்வதறியாமல் தவிக்கும் தொழிலாளர்களுக்கு அரசுதான் கை கொடுக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT