Published : 13 Apr 2020 06:54 AM
Last Updated : 13 Apr 2020 06:54 AM
கரோனாவை எதிர்கொள்ள நாட்டில் ஊரடங்கு அமலுக்கு வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. இனியும் எத்தனை நாட்களுக்கு இப்படி வீட்டிலேயே முடங்கிக் கிடப்பது என்ற விரக்தி ஒருபுறம்; அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில் எழும் பல சந்தேகங்கள் மறுபுறம். அப்போதெல்லாம் மருத்துவராக என்னிடம் அலைபேசியில் அழைக்கிறார்கள்; கேட்கிறார்கள். அதற்கு நான் சொன்ன சில பொதுவான பதில்கள் இங்கே...
எனக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. இன்சுலின் போட்டுக்கொள்கிறேன். அலுவலகத்தில் நடந்து கொண்டிருப்பேன். இப்போது வீட்டில் இருப்பதால் எனக்கு ரத்தச் சர்க்கரை கூடிவிடுமா?
வழக்கமான உணவுமுறையைப் பின்பற்றுங்கள். வழக்கமாக இன்சுலின் போட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் வீட்டிலேயே இருக்கும்போது உடலியக்கம் குறைவதால் ரத்தச் சர்க்கரை கூடுவதற்கு வாய்ப்பு உண்டு. குளுக்கோமீட்டரில் உங்கள் ரத்தச்சர்க்கரையை மூன்று நாட்களுக்கு ஒருமுறை பரிசோதித்துக் கொள்ளுங்கள். ரத்தச் சர்க்கரை கூடினால் உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி இன்சுலின் அளவை சரிசெய்துகொள்ளுங்கள். சுய சுத்தம் காத்து எந்தவித தொற்றும் உங்களை நெருங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். பொதுவாக, நீங்கள் மற்ற விஷயங்களில் சரியாக இருந்தாலும் உடலில் ஏதேனும் தொற்று ஏற்பட்டுவிட்டால் உங்கள் ரத்தச் சர்க்கரை அதிகரித்துவிடும். அதனால்தான் இந்த எச்சரிக்கை.
நான் தினமும் காய்கறிகள் வாங்ககடைக்குச் சென்றுகொண்டிருக்கிறேன். வீட்டுக்கு வந்ததும் காய்கறிகளை சோப்புத் தண்ணீரில் கழுவவில்லை. எனக்கு கரோனா பரவிவிடுமோ என பயப்படுகிறேன். எனக்கு ஆலோசனை கூறுங்கள்.
அரசின் புதிய உத்தரவின்படி கடைக்குச் செல்லும்போது முகத்துக்குக் கவசம் அணிந்துகொள்ளுங்கள். அங்கு 3 – 6 அடி தூரம் விலகியே இருங்கள். செல்லும் இடங்களில் தேவையில்லாத இடங்களைத் தொடாதீர்கள். தினமும் கடைக்குச் செல்வதற்குப் பதிலாக வாரம் ஒருமுறை செல்லுங்கள். வீட்டுக்கு வந்ததும் காய்கறிகளை சுத்தமான தண்ணீரில் நன்றாக கழுவி, வேறு பாத்திரத்தில் எடுத்துவையுங்கள். காய்கறி வாங்கிவந்த பையையும் சோப்புத் தண்ணீரில் அலசுங்கள். நீங்கள் சோப்பு போட்டுக் குளியுங்கள். காய்கறி, பழங்களை சோப்புத் தண்ணீரில் கழுவ வேண்டிய அவசியமில்லை.
நான் 8 மாத கர்ப்பிணி. வழக்கமான பரிசோதனைகளுக்கு மருத்துவரைச் சந்திக்க முடியாத சூழல் உள்ளது. நான் என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் ஏற்கனவே சாப்பிடும் மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிடுங்கள். வீட்டிலேயே சிறிய உடற்பயிற்சிகளை செய்துகொள்ளுங்கள். ஊட்டச்சத்து உணவுகளை உண்ணுங்கள். போதுமான ஓய்வும் மன அமைதியும் தேவை. பயமும் பதற்றமும் வேண்டாம். வெளியில் செல்லாதீர்கள். சுய சுத்தம், வீட்டுச் சுகாதாரம் முக்கியம். அடிக்கடி கைகழுவுவது கட்டாயம். வீட்டிலும் சமூக விலகலைப் பின்பற்றுங்கள். ஜலதோஷம், சளி, இருமல் பிடிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். வயிற்று வலி, உதிரப்போக்கு போன்றவை இருந்தால் உங்கள் மருத்துவரிடம் அலைபேசியில் ஆலோசனை பெறுங்கள். அவசரம் என்றால் மட்டும் மருத்துவமனைக்குச் செல்லுங்கள். நீங்கள் ஆலோசனை பெறும் தனியார் மருத்துவமனையில் மருத்துவர் இல்லாவிட்டால், அரசு மருத்துவமனைக்குச் செல்லுங்கள். அவசரப் பிரச்சினை உள்ளவர்களை அங்கே கவனிப்பார்கள்.
அடுத்து, பிரசவம் நெருங்கும்போது குறிப்பிட்ட தேதிக்கு முன்னரே அரசு மருத்துவமனையிலோ தனியார் மருத்துவமனையிலோ சேர்ந்துகொள்ளுங்கள். கடைசி நேரத்தில் மருத்துவமனைக்குச் செல்ல வாகனம் கிடைக்கவில்லை; மருத்துவர் இல்லை; மருந்து இல்லை போன்ற குற்றச்சாட்டுகளைத் தவிர்க்க இந்த முன்னேற்பாடு உதவும்.
நான் 6 மாத கர்ப்பத்தில் உள்ளேன்.இந்த வாரம் எனக்கு ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று என் மகப்பேறு மருத்துவர் சொல்லியிருக்கிறார். மருத்துவமனைக்குச் செல்ல பயமாக இருக்கிறது. நான் என்ன செய்ய வேண்டும்? ஸ்கேன் எடுப்பது கட்டாயமா?
நீங்கள் ஆரோக்கியமானவராக இருந்தால் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியது இல்லை. ஸ்கேன் எடுக்க வேண்டியது அவசியம்தான். ஆனால் அது அவசரமில்லை. இரண்டு வாரங்கள் கழித்து எடுத்துக் கொள்ளலாம்.
என் ஆறு வயது குழந்தைக்கு இந்த வாரம் தடுப்பூசி போடப்பட வேண்டும். நான் வழக்கமாக போட்டுக்கொள்ளும் மருத்துவமனை அடைக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பிலிருந்தும் தடுப்பூசி போடப்படுவதாகத் தெரியவில்லை. என் குழந்தைக்கு தடுப்பூசி எப்போது, எங்கே போட்டுக் கொள்வது?
மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அங்கேயே தடுப்பூசியைப் போட்டுவிடுகிறார்கள். மற்றவர்களுக்கு முறையான தேதிகளில் தடுப்பூசி போடப்பட வேண்டியது அவசியம்தான். என்றாலும் ஊரடங்கு அமலில் இருக்கும்போது குழந்தைகளைத் தடுப்பூசி போடுவதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது சரியல்ல. தடுப்பூசி அவசர சிகிச்சை அல்ல. எந்தத் தடுப்பூசியாக இருந்தாலும் மூன்று வாரங்கள் தள்ளிப் போட்டுக்கொள்ளலாம். இது தவறல்ல.
ஊரடங்கு விலக்கப்பட்டதும் தடுப்பூசியை தனியார் அல்லது அரசு மருத்துவமனையில் போட்டுக்கொள்ளலாம். இப்போது உள்ள சூழலில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்போ து காய்ச்சல், வயிற்றுப்போக்கு வந்தால் அது தடுப்பூசியின் பக்கவிளைவா, கரோனா பாதிப்பா என்ற சந்தேகமும் வந்து பெற்றோரை பயமுறுத்தும். வேண்டாம், விபரீதம்.
நான் சர்க்கரை நோயாளி. என்அடுக்ககத்தில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் தினமும் பயிற்சிகள்செய்வேன். இப்போது அங்கே செல்ல அனுமதியில்லை. அதனால் எனக்கு ரத்தச் சர்க்கரை கூடிவிட்டது. நான் என்ன செய்ய வேண்டும்?
நன்கு அறிந்த யோகா ஆசிரியர்களிடம் அலைபேசியில் ஆலோசனை கேட்டு எளிய யோகா பயிற்சிகளையும் சிறிய உடற்பயிற்சிகளையும் வீட்டுக்குள்ளேயே செய்யுங்கள். யோகா ஆசிரியர் இல்லை என்றால், உங்களுக்கு உதவ காணொலிக் காட்சிகள் நிறைய கிடைக்கின்றன. வீட்டைச்சுற்றி அல்லது மாடியில் காலையிலும் மாலையிலும் தலா அரைமணி நேரம் நடைப்பயிற்சி செய்யுங்கள். உணவுக்கட்டுப்பாட்டில் அக்கறை காட்டுங்கள்.
என் தூரத்து உறவினர் ஒருவர் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தனக்குகாய்ச்சல், இருமல், சளி, மூச்சுத்திணறல் எதுவும் இல்லை. ஆனால், எனக்கு கரோனா தொற்று இருக்கிறது என்று சொல்கிறார்கள் என நம்பிக்கையிழந்து சொல்கிறார். 14 நாட்களுக்கு பிறகும் அறிகுறி இல்லாமல் கரோனா பாதிப்பு இருக்க முடியுமா?
28 நாட்கள் வரை அறிகுறிகள் தெரியாமல் கரோனா இருக்க வாய்ப்பு இருக்கிறது. இதுதான் கரோனாவின் ஸ்பெஷாலிட்டி! உறவினருக்கு அடுத்தகட்ட பரிசோதனை முடிவில் தொற்று இல்லை என்று வந்ததும் இப்போதைய கண்காணிப்பிலிருந்து அவர் விலக்கப்படுவார்.
இப்போது பல ஊர்களில் புதிதாக கிருமிநாசினி சுரங்கம் அமைக்கிறார்கள். சில நாட்களாக எங்கள் ஊர் தெருக்களில் இயந்திரவாகனம் கொண்டு கிருமிநாசினி தெளிக்கிறார்கள். அது என்ன? வீட்டிலும் அந்த மாதிரி தெளிக்கலாமா?
கரோனா போன்ற தொற்றுக் கிருமிகள் பரவுவதைத் தடுக்க பொது சுகாதாரம் மேம்பட்ட நிலையில் இருக்க வேண்டியது முக்கியம். அதற்கான முன்னெடுப்புதான் இது. சோடியம் ஹைப்போகுளேரைட் எனும் கிருமிநாசினியைக் குறிப்பிட்ட அளவில் தண்ணீரில் கலந்து பொது இடங்களிலும், மக்கள் அதிகம் நடமாடும் இடங்களிலும் தெளிக்கிறார்கள். இது காற்றில் கலந்தும் தரையில் பட்டும் அங்குள்ள கிருமிகளை அழித்துவிடுகிறது. கரோனா தொற்று பரவுவது குறைகிறது. இந்த முன்னெடுப்போடு சமூக விலகலும் தனிமைப் படுத்திக்கொள்வதும் முக்கியம்தான். அதைக் கைவிட்டுவிடக்கூடாது. இந்த கிருமிநாசினியை வீட்டிலும் பயன்படுத்தலாம். முதலில் வீட்டுத் தரையை சுத்தப்படுத்தி, தண்ணீரில் ஒருமுறை கழுவிவிட்டுக் கொள்ள வேண்டும். அதன் பிறகு 75 மி.லி. 5% சோடியம் ஹைப்போகுளேரைட் திரவத்தை 5 லிட்டர் தண்ணீரில் கலந்து தரையைச் சுத்தம் செய்ய வேண்டும்.
நீராவி பிடித்தால் கரோனா இறந்துவிடுமாமே, அது உண்மையா?
நீராவி பிடிப்பது மூக்குப் பகுதிக்கு நல்லது. மூக்கடைப்பு விலகும். இதனால் கரோனா கிருமிஇறந்துவிடும் என்று சொல்வதற்கு இன்னும் ஆய்வுகள் நடத்தப்படவில்லை. ஆகவே, நீராவியை நம்பி கைகழுவுவது, சமூகவிலகல், தனித்திருப்பது போன்ற முக்கிய விஷயங்களில் நீங்கள் கோட்டைவிட்டு விடக்கூடாது.
சுடுநீர் குடிப்பது, சூடான தண்ணீரில் கல் உப்புபோட்டுக் கொப்பளிப்பது போன்றவற்றால் கரோனா வராமல் தடுக்கலாம் என்று சொல்வது சரியா?
சுடுநீர் குடிப்பது, சூடான தண்ணீரில் கல் உப்பு போட்டுக் கொப்பளிப்பது போன்றவற்றின் மூலம்தொண்டையை சுத்தப்படுத்திக்கொள்ளலாம். ஆனால், கிருமிகள்சாகாது. அதற்கு தகுந்த கிருமிக்கொல்லி சிகிச்சை தேவை.கரோனா இப்போது வந்துள்ளபுதிய பாதிப்பு. மேற்சொன்ன செவி வழிச்செய்திகள் உண்மையா,இல்லையா என்பதை அறிவியல்ரீதியாக தெரிந்துகொள்ள இன்னும் சிலகாலம் ஆகும். அதுவரை இந்த மாதிரியான ஊடக ஊகங்களுக்கு இடமளிப்பது தவறு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT