Published : 12 Apr 2020 07:21 PM
Last Updated : 12 Apr 2020 07:21 PM

மருத்துவர்களுக்கும், மாநிலங்களுக்கும் தேவை தற்கவச ஆடை: சு.வெங்கடேசன் எம்.பி

மதுரை

மருத்துவர்களுக்கும், மாநிலங்களுக்கும் தற்கவச ஆடைதேவை என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மதுரை மக்களவைத்தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

மத்திய வணிக அமைச்சகம் விடுத்துள்ள விளக்கம் ஒன்று அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. முதல்வர் நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள் வழங்குகின்ற நன்கொடைகள் ‘கார்ப்பரேட் சமூக பொறுப்பு செலவினமாக’ (சி.எஸ்.ஆர்) அங்கீகரிக்கப்படாதாம்!. பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டால் மட்டுமே அது சி.எஸ்.ஆர் பங்களிப்பாக கருதப்படுமாம்.

கோவிட் 19 பாதிப்பை எதிர்கொள்ள மாநில அரசுகள் நிதியாதாரங்களுக்கு அல்லாடி வரும் வேளையில் இந்த விளக்கம் தரப்பட்டுள்ளது. இது நிறுவனங்கள் சட்டம் 2013 பட்டியல் VII ன் கீழ் வராது என நீட்டி முழக்கியுள்ளது. சட்டம் குறுக்கே வந்தால் அதை உடனடியாக திருத்துவதற்கு என்ன வழி என்று யோசிக்காமல் ஜோஸ்யக் கிளி போல அரசாங்கம் ஒப்பிப்பது தற்செயலானது அல்ல. கூட்டாட்சி முறைமையை தகர்க்க நினைக்கிற பா.ஜ.கவின் நிகழ்ச்சி நிரலை நெருக்கடி மிக்க காலத்திலும், அதையே பயன்படுத்தி முன்னெடுக்க முனைகிற குரூரமாகும்.

ஏற்கெனவே நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை பறித்தாகிவிட்டது. மாநில அரசுகள் கேட்கிற நிவாரணத்தை வழங்குவதில் எந்த நியதியையும் கடைபிடிக்கப்படுவதில்லை. தமிழகம் கொள்முதல் செய்திருந்த விரைவு பரிசோதனைக் கருவிகள் தட்டிப்பறிக்கப்படுகிறது.

முகக் கவசம், விரைவு மருத்துவ சோதனை கருவிகள், சுவாசக்கருவிகள் போன்ற மருத்துவ தேவைகள் ஒரு புறம், ஊரடங்கால் வேலையிழந்து அன்றாட வாழ்க்கைக்கு அலை மோதும் மக்களுக்கு நிவாரணம், சிறு தொழில், விவசாயம் மூச்சுத் திணறி தவிக்கிற நிலைமையில் இதற்கெல்லாம் நிதிப் பங்களிப்பு தேவைப்படுகிற சூழல் மறு புறம். ஆனால் இதற்கான நிதி உதவியை விரைந்து வழங்காத மத்திய அரசு இப்படி மாநில அரசாங்கங்கள் சொந்த முயற்சியில் திரட்டுகிற நிதியாதாரங்களுக்கான ஊற்றையும் தூர்ந்து போகச் செய்வது அநியாயம்.

கரோனா என்பது மனிதகுலத்துக்கே உயிர்பறிக்கும் தொற்றாக தெரிகிறது. ஆனால் மத்திய அரசுக்கு மட்டும் மாநில உரிமைகளை பறிக்கும் வாய்ப்பாக தெரிகிறது. இப்போது இந்தியாவுக்குத் உடனடி தேவை மருத்துவர்களுக்கும், மாநிலங்களுக்கும் தற்கவச ஆடை. நம் உயிரையும் உரிமையையும் தற்காத்துக்கொள்ள விழிப்புடன் செயல்படுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x