Published : 12 Apr 2020 07:12 PM
Last Updated : 12 Apr 2020 07:12 PM
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் அமைப்புகள் தாராளமாக நல்லெண்ணத்துடன் உதவுவதை பிடிக்காமல் அரசு இடி அமீன் உத்தரவை போட்டுள்ளது. மனித நேயமற்ற உத்தரவை உடனே திரும்ப பெற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
“நூறாண்டு காலத்தில் மக்கள் இதுவரை சந்தித்த கொள்ளை நோய்களுக்கு எல்லாம் உச்சகட்டமாக, கோவிட்-19 கரோனா நாசகார நோய் மனித உயிர்களை உலகெங்கும் பலிவாங்கி வருகிறது. இதைத் தடுப்பதற்கோ, முழுமையாக குணப்படுத்துவதற்கோ உரிய மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
கோடானு கோடி மக்கள் விவரிக்க முடியாத துன்பத்துக்கு ஆளாகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், அமைப்புச் சாரா தொழிலாளர்கள், அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது என்று பரிதவித்து நிற்பதை எண்ணினால் இதயமே வெடிக்கிறது.
இந்நிலையில், அரசாங்கம் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். ஒருவரை விட்டு ஒருவர் மூன்று அடி தூரத்திற்கு அப்பால் தள்ளி நிற்க வேண்டும் என்பதைக் கடைப்பிடிக்கிறது. ஒரு சிலர் பொறுப்பற்று நடந்துகொள்கின்றனர். ஆனால் அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள், மனிதநேயம் உள்ளோர் பிறர் துன்பத்தில் பங்கெடுக்க விளைவோர் ஆங்காங்கு முறையாகப் பொருட்களையும், உணவையும் வழங்கி வருகின்றனர்.
இப்படி வழங்குவதில் தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் எந்தக் குளறுபடியும் நடக்கவில்லை. தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளாமலேயே மனிதாபிமான உதவிகள் செய்து வருகின்றனர். தமிழக அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையைத்தான் அவர்கள் செய்து வருகின்றனர்.
இத்தகைய உதவிகள் செய்வோரைக் கண்டு மகிழ்ந்து பாராட்ட வேண்டிய தமிழக அரசு, தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான திமுகவும், மற்றவர்களும் இந்த மனிதநேயப் பணிகளைச் செய்து, மக்களிடம் நல்ல பெயர் கிடைக்கிறதே என்ற பொறாமைத் தீ உள்ளத்தில் எழுந்ததால், இன்று ஒரு அக்கிரமமான அறிவிப்பை தமிழக அரசு செய்திருக்கிறது.
தனிப்பட்டவர்களோ, தனிப்பட்ட அமைப்புகளோ, அரசியல் கட்சிகளோ பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பொருளோ, பணமோ, உணவோ கொடுக்கக்கூடாது. அப்படிக் கொடுப்பதாக இருந்தால் தமிழக அரசிடம்தான் தர வேண்டும் என்று இடி அமீன் கட்டளையைப் பிறப்பித்து இருக்கிறது. இது மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும்.
பொதுமக்களுக்கு கரோனா உதவிகளை பிறர் செய்த இடத்தில் எங்காவது ஒரு பிரச்சினை ஏற்பட்டதா? குழப்பம் ஏற்பட்டதா? தள்ளுமுள்ளு ஏற்பட்டதா? ஒன்றுமே கிடையாது. மிக முறையாக விநியோகிக்கப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் கோடிக்கணக்கhன மக்கள் இதனால் பயன்பெறுகிறார்கள்.
சந்தைகள், கடைகளில் பொருள்களை மக்கள் விலைக்கு வாங்குகின்ற இடத்தில்தான் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. தமிழக அரசின் அறிவிப்பு, கோடானு கோடி தமிழர்களின் நெஞ்சில் நெருப்பு வைப்பதாகும்.
மக்கள் பொறுமை ஒரு கட்டத்துக்கு மேல் கட்டுப்படுத்த முடியாது. அதனை உணர்ந்து உடனடியாக இன்று பிற்பகலில் வெளியிட்ட அறிவிப்பை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். தன்னார்வ அமைப்புகள், அரசியல் கட்சிகள், மனிதநேயம் உள்ளோர் உணவோ, பொருட்களோ வழங்குகின்ற இடத்தில் மக்களை ஒழுங்குபடுத்துவதற்கு காவல்துறையையும், அரசு அதிகாரிகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம்”.
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT