Published : 12 Apr 2020 03:58 PM
Last Updated : 12 Apr 2020 03:58 PM
கரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள சூழலில் போலீஸாரின் பயன்பாட்டுக்காக கிருமிநாசினி டிரங்க் பெட்டிகள் புதுச்சேரியில் தயாராகின்றன. பஞ்சாபிலுள்ள ஐஐடி-ரோபர் உதவியுடன் அரவிந்தர் ஆசிரமத்தில் இப்பெட்டிகள் உருவாக்கப்படுகின்றன.
கரோனா வைரஸ் தொற்றிலிருந்து காக்க பல்வேறு புதிய உத்திகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. போதிய பாதுகாப்பு சாதனங்கள் பற்றாக்குறை நிலவும் சூழலில் காத்து கொள்ள பல அடிப்படை அம்சங்களை மக்கள் கடைபிடித்து காத்து கொள்கின்றனர்.
புதுச்சேரி காவல்துறையினர்பஞ்சாப் ஐ.ஐ.டி-ரோபரின் வல்லுநர்கள் குழு வடிவமைத்த கிருமிநாசினி டிரங்க் சாதனங்களை தற்போது பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
காவல்துறையானது அரவிந்தர் ஆசிரமத்தின் பட்டறை சார்பில் 30 கிருமிநாசினி டிரங்க் பெட்டிகளை உருவாக்க திட்டமிட்டு, இதுவரை, அவர்கள் ஏழு டிரங்க் பெட்டிகளை உருவாக்கியுள்ளனர்.
தேவையானவற்றை பயன்படுத்தும் முன்பு இப்பெட்டியில் வைத்து சுத்திகரித்து பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
ஐ.ஐ.டி-ரோப்பர் குழுவின் எளிய தொழில்நுட்பத்தை கொண்டு இந்த சாதனத்தை உருவாக்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஆசிரம பட்டறை கொண்டுள்ளதாக குறிப்பிடுகின்றனர்.
இது எப்படி வேலை செய்கிறது என்பது தொடர்பாக தொழில்நுட்ப வல்லுநர்களிடம் கேட்டதற்கு
,"தொழில்நுட்பம் மிகவும் எளிமையானது மற்றும் எந்த அளவிலான டிரங்க் பெட்டிகளையும் கிருமிநாசினி டிரங்க் பெட்டிகளாக மாற்ற முடியும். பெட்டியின் உட்புறம் முழுக்க அலுமினியத் தகடுகள் ஒட்டப்படும். உள்ளே புற ஊதா-சி ஒளி ( UV-C light) மூலத்தை ஒளிரச் செய்யும்போது, படலம் ஒரே மாதிரியாக விநியோகிக்கப்படுகிறது இது உள்ளே வைக்கப்பட்டுள்ள பொருட்களை சுத்தப்படுத்துகிறது.
யு.வி-சி ஒளி அதன் சுற்றுப்புறங்களை கிருமி நீக்கம் செய்கிறது என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நாம் செய்ய வேண்டியதெல்லாம் பொருட்களை பெட்டிக்குள் வைப்பது, யு.வி-சி ஒளி மூலத்தை 30 நிமிடங்கள் சுவிட்ச் ஆன் செய்து அணைக்க வேண்டும் அப்போது பொருட்கள் சுத்திகரிக்கப்படும். பத்து நிமிஷங்களுக்கு பிறகு சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை எடுத்து கொள்ளலாம்" என்று குறிப்பிட்டனர்.
ஜஜி சுரேந்திர சிங் யாதவிடம் கேட்டதற்கு, "சிறைச்சாலையில் பணியாற்றும் காவல்துறையினருக்கு இப்பெட்டி முதலில் அனுப்பப்பட்டுள்ளது.இவர்கள் பை, பேனா, மொபைல் போன்கள், சாவிகள் மற்றும் நாணயங்கள், பணத்தாள்கள் போன்றவற்றை சுத்திகரித்து பயன்படுத்துகின்றனர்.
அடுத்த இரண்டு நாட்களில் மேலும் 20 பெட்டிகள் தயாரித்து,கரோனா அச்சுறுத்தலால் சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றும் போலீஸாருக்கு அனுப்பப்படும்" என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT