Published : 11 Apr 2020 04:48 PM
Last Updated : 11 Apr 2020 04:48 PM
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும். பசி, பட்டினியைத் தவிர்க்க உடனடியாக ரூ.5 ஆயிரம் கூடுதலாக உதவித்தொகை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
பழ.நெடுமாறன், தொல்.திருமாவளவன், த.செ.கொளத்தூர் மணி, பேராசிரியர் ஜவாஹிருல்லா, தி.வேல்முருகன், கு.ராமகிருட்டினன், தெஹ்லான் பாகவி, திருமுருகன் காந்தி, கே.எம்.சரீப், இனிகோ இருதயராஜ், வன்னி அரசு, நெல்லை முபாரக், ப. அப்துல் சமது, பெரியார் சரவணன் ஆகியோர் கரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு சார்பில் இன்று கூட்டாக இணைந்து வெளியிட்ட அறிக்கை:
''கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமான ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் வேலையின்மையால் மக்களின் வாழ்வாதாரம் பெரும் சிக்கலைச் சந்தித்துள்ளது. பொருளாதாரம் இன்மையால் பெரும் இன்னல்களுக்கு மத்தியில்தான் அவர்கள் இந்த ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். அரசு அளிக்கும் ரூ.1000 உதவித்தொகை என்பது யானைப் பசிக்கு சோளப்பொரி போன்றதாக உள்ளது.
மறுபுறம் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றமானது பொதுமக்களை மேன்மேலும் துயருக்குள் தள்ளுகிறது. பெரும்பாலான அத்தியாவசியப் பொருட்களின் விலையானது 30% முதல் 50% வரை உயர்ந்துள்ளது. பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக இந்த விலையேற்றம் நிகழ்ந்தாலும், மறுபுறம் பதுக்கல்காரர்களின் கொள்ளை லாப நோக்கமும் இத்தகைய விலையேற்றத்துக்கு முக்கியக் காரணமாகும்.
ஆகவே, தமிழக அரசு இத்தகைய வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உடனடியாக மாவட்ட வாரியாக கண்காணிப்புக் குழுவை நியமித்து விலைவாசி ஏற்றத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
காய்கறிகளை விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்கு வாங்கி சந்தைகளில் அதிக அளவுக்கு இடைத்தரகர்களால் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிலோ மிளகாய் கிலோ ரூ.10க்கும் குறைவாக விவசாயிகளுடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு அது கடைகளில் கிலோ ரூ.80 முதல் 100 வரை விற்கப்படுகின்றது. இதுபோன்று பலவகையான காய்கறிகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதனால் விவசாயிகள் போதிய விலை கிடைக்காமல் பாதிக்கப்படுவதோடு, ஊரடங்கால் வருமானம் இன்றி முடக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான மக்களும் துயரங்களுக்கு ஆளாகின்றனர். இதனை தமிழக அரசு உடனடியாக கவனத்தில்கொண்டு செயல்பட வேண்டும்.
ஊரடங்கானது மேலும் நீட்டிக்கப்படும் பட்சத்தில் அரசு குறைந்தது கூடுதலாக ரூ.5000 ஆயிரம் உதவித் தொகையை தமிழக அரசு ஒவ்வொரு குடும்பத்திற்கும் உடனடியாக வழங்கினால் மட்டுமே, மக்கள் பசியின்றி வாழ முடியும். இல்லாவிட்டால் கரோனாவுக்கு எதிரான போரில் மக்கள் பசி, பட்டினியில் சிக்கும் அபாயகரமான சூழல் ஏற்பட்டுவிடும் என்பதையும் மத்திய, மாநில அரசுகள் கவனத்தில்கொள்ள வேண்டும்''.
இவ்வாறு கரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT