Published : 11 Apr 2020 03:55 PM
Last Updated : 11 Apr 2020 03:55 PM
மதுரையில் அரசு மருத்துவமனையில் ‘கரோனா’ வார்டு பணி பார்க்கும் செவிலியர்களுக்கு சாப்பாடு வழங்க, அவர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் ரூ.1000 கட்டாயம் வசூல் செய்ய உத்தரவிட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைகளில் ‘கரோனா’ வார்டுகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிரத்தியேக சிறப்பு சிகிச்சை வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வார்டில் 3 அடி இடைவெளியில் நோயாளிகளுக்கான படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நோயாளிகளுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் அவர்களுக்கு செயற்கை சுவாசம் அளிக்க வெண்டிலேட்டர் கருவி உட்பட அனைத்து நவீன கருவிகளும் உள்ளன. நோயாளிகளுக்கான குடிநீர், கழிப்பறை வசதி உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
மருத்துவர்களைப் பொறுத்தவரையில் ‘கரோனா’ வார்டு பணியில்பேராசிரியர்கள், இணைப்பேராசிரியர்களுக்கு விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள், நிர்வாகம் சார்ந்த பணிகள், நோயாளிகளுக்கான சிகிச்சையில் உதவிப் பேராசிரியர்கள், சிறப்பு பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
உதவிப் பேராசிரியர்கள், பட்டமேற்படிப்பு மருத்து மாணவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் ஒரு வாரம் பணி வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் அடுத்த 14 நாட்கள் தங்களைத் தாங்களே அவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள், தனிமைப்படுத்தும் காலம் முடிந்தப்பிறகு ‘கரோனா’ பரிசோதனைசெய்து நெகட்டிவ் வந்தால் மட்டுமே அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள்.
சுழற்சிப் பணி ஒருவாரம் முடிந்தபிறகு தனிமைப்படுத்தப்படும் காலமான 14 நாட்கள் அவ்ரகள் தங்குவதற்கு மருத்துவர்களுக்கு மதுரை தமிழ்நாடு ஓட்டலில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
செவிலியர்களுக்கு தனிமைப்படுத்தப்படும் காலமான 14 நாட்கள் தங்குவதற்கு ஏற்கெனவே இடநெருக்கடியில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் உள்ள செவிலியர் விடுதியில் இடம் ஒதுக்கியுள்ளனர்.
நேற்று வரை ‘கரோனா’ வார்டு பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு மருத்துவமனை நிர்வாகமே பாராபட்சமில்லாமல் சாப்பாடு ஏற்பாடு செய்து வழங்கியது.
இந்நிலையில் தற்போது மருத்துவர்களுக்கு, அவர்களை மருத்துவர்கள் சங்கம் சார்பில் சாப்பாடு ஏற்பாடு செய்து கொள்வதாக சொல்லிவிட்டனர். செவிலியர்களுக்கு சாப்பாடு வழங்குவதற்கு அவர்களிடமே மருத்துவமனை நிர்வாகம் ரூ.1,000 நன்கொடை வசூல் செய்ய உத்தரவிட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து செவிலியர்கள் கூறுகையில், ‘‘கரோனா பணியால் மனஅழுத்திற்கு ஆளாகி அந்த வார்டில் வெளியே வரும் நாங்கள், அதன்பிறகும் நிம்மதியில்லாமல் தனிமைப்படுத்தப்படும் இந்த 14 நாட்களை இந்த செவிலியர் விடுதியில் மிகுந்த சிரமத்துடன் கழிக்க வேண்டிய உள்ளது.
செவிலியர்களுக்கு ‘கரோனா’ வார்டு ஒரு வார பணி நாட்கள் மட்டுமில்லாது, தனிமைப்படுத்தப்படும் 14 நாட்களுக்கும் சாப்பாடு சாப்பிடுவதற்கு மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து செவிலியர்களிடமும் தலா ரூ.1,000 பணம் கேட்கின்றனர்.
சாப்பாட்டிற்கு பணம் வாங்குவதை தவிர்த்து, அரசே சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ‘கரோனா’ வார்டு பணியில் மட்டுமில்லாது, தங்குமிடம், சாப்பாடு விஷயத்திலும் மருத்துவமனை நிர்வாகம், மருத்துவர்களை ஒரு விதமாகவும், செவிலியர்களை மற்றொரு விதமாகவும் பாராபட்சமாக நடத்துகிறது, ’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT