Published : 11 Apr 2020 02:59 PM
Last Updated : 11 Apr 2020 02:59 PM
விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு கரோனா தொற்று உள்ளது என மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஏப்.11) ஆட்சியர் அண்ணாதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் நகரத்தைச் சேர்ந்த 18 பேருக்கும், செஞ்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கும் என மாவட்டம் முழுவதும் 23 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் விழுப்புரம் நகரப் பகுதியில் மேலும் கரோனா தொற்று பரவாமல் இருக்க விழுப்புரம் நகரில் உள்ள 42 வார்டு பகுதிகளிலும் வாரத்திற்கு ஒருமுறை, குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே வெளியே வந்து அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுச்செல்ல ஒரு வரன்முறை ஏற்பாடு செய்யப்பட்டு வண்ண அட்டைகள் வழங்கப்பட உள்ளன.
இதனை நகராட்சி நிர்வாகத்தினர் வீடு, வீடாக வந்து வழங்குவார்கள். இந்த வண்ண அட்டைகளைப் பெற்று வரும் திங்கட்கிழமை முதல் வாரத்தில் யார், யாருக்கு எந்த நாளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதோ அதன்படி பொருட்களை வாங்கிச் செல்ல ஒழுங்குமுறைப்படுத்தப்பட இருக்கிறது.
மேலும், விழுப்புரம் நகரில் முக்கியமான 3 சாலைகள் மட்டும் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டு அந்த சாலைகளின் வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், செஞ்சி நகரப் பகுதிகளும் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டு முக்கியச் சாலைகள் தடை செய்யப்பட்டுள்ளன.
விழுப்புரத்தைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை சார்பில் சிறிய வாகனங்கள் மூலம் அத்தியாவசியப் பொருட்களைத் தடையின்றி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் எங்கும் குடிநீர் தட்டுப்பாடு இல்லை.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட டெல்லி இளைஞரைப் பிடிக்க அவரின் புகைப்படத்தையும் தேசிய அளவிலும், மாநில அளவிலும் அனுப்பப்பட்டு கண்காணிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அவருடன் தொடர்பில் இருந்த 24 பேரைக் கண்டறிந்து மருத்துவப் பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்துள்ள 46 பேரைக் கண்டறிந்து அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ததில் 6 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இன்னும் 5 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவில்லை. இதுவரை விழுப்புரம் மாவட்டத்தில் 207 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 182 பேருக்கு நோய்த் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டதும் அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது 25 பேர் மருத்துவமனையில் உள்ளனர்"
இவ்வாறு ஆட்சியர் அண்ணாதுரை கூறினார்.
அப்போது எஸ்.பி.ஜெயக்குமார், ஏடிஎஸ்பி சரவணக்குமார், டி.எஸ்.பி சங்கர், நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT