Published : 11 Apr 2020 11:25 AM
Last Updated : 11 Apr 2020 11:25 AM
இயற்கை விவசாயத்தில் அறுவடைக்குத் தயாரான காய்கறிகளைப் பறிக்க ஆளில்லாமல் அழுகுவதால் பி.டெக். பட்டதாரி தினேஷ் தவித்து வருகிறார்.
புதுச்சேரி லிங்காரெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பி.டெக். பட்டதாரி தினேஷ். அவர் படித்த பிறகு விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.
சொட்டு நீர் பாசன முறையைப் பயன்படுத்தி வருகிறார். இவர் தனது நிலத்தில் கரும்பு, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்து வருகிறார். மேலும், பாகற்காய், தக்காளி, கத்தரி உள்ளிட்ட தோட்டப் பயிர்களையும் பயிர் செய்து வருகிறார்.
அறுவடைக்குத் தயாராக இருக்கும் இந்தக் காய்கறிகளை மூன்று நாட்களுக்கு ஒருமுறை பறிக்க வேண்டும். ஆனால், தற்போது இயற்கை விவசாயத்தில் விளைந்து அறுவடைக்குத் தயாரான காய்கறிகளை அறுவடை செய்ய முடியாததற்கு காரணம் கரோனா.
இது தொடர்பாக தினேஷ் கூறுகையில், "நடப்பு ஆண்டு இரண்டு ஏக்கருக்கு மேல் பாகற்காய், தக்காளி ஆகியவற்றைப் பயிரிட்டேன். நல்ல விளைச்சலும் இருந்தது. ஆனால், ஊரடங்கு காரணமாக நன்கு விளைந்த பாகற்காயை வாங்கிச் செல்ல வியாபாரிகள், எடுத்துச் செல்ல வாகனங்கள் இல்லாததால் வீணாகிறது.
மேலும், காய்களில் ஏற்படும் சரகல் நோயைக் கட்டுப்படுத்தத் தேவையான மருந்துகளை வாங்க தமிழகப் பகுதிக்குச் செல்ல வேண்டும். ஊரடங்கு காரணமாக போலீஸாரின் கெடுபிடியால் செல்ல முடியாத நிலையுள்ளது.
கரோனாவால் ஊரடங்கு உத்தரவு காரணமாக விவசாயத் தொழிலாளர்கள் தொழிலுக்கு வராத சூழல் உருவாகியுள்ளது. இதனால் பயிர்கள் அறுவடை செய்ய முடியாமல் செடியிலேயே அழுகுகிறது. பயிர்களைக் காக்க தமிழகப் பகுதியில் இருந்துதான் இயற்கை விவசாயத்துக்குத் தேவையானவற்றை வாங்கி வர முடியும்.
போலீஸாரின் கெடுபிடியால் இயற்கை விவசாயத்துக்குத் தேவையானதை வாங்கி வர முடியவில்லை. இதனால், பலத்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளேன். விவசாயிகள் தங்களுக்குத் தேவையானதை வாங்க விலக்கு தந்தால் நன்றாக இருக்கும். நல்ல விலையும், விளைச்சலும் இருந்தும் இம்முறை எந்தப் பயனுமில்லை" என்று தெரிவித்தார்.
இவருடன் பணிபுரியும் விவசாயத் தொழிலாளி புண்ணியக்கோடி கூறுகையில், "இயற்கை முறையில் விளைவிக்கும் பயிர்களை குழந்தைகள் போல் பாதுகாத்து வளர்த்தோம். தற்போது நல்ல விளைச்சல் இருந்தும் அறுவடை செய்ய முடியாமல் அழுகி இருப்பதும், அடுத்தகட்டமாக தேவையான இயற்கை விவசாயத்துக்குத் தேவையானதை வாங்க முடியாமல் பயிர்கள் கிடப்பதைப் பார்ப்பது கண்ணீரை வரழைக்கிறது" என்றார், உருக்கமாக.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT