Published : 11 Apr 2020 11:10 AM
Last Updated : 11 Apr 2020 11:10 AM
தமிழகத்தில் ‘கோவிட்-19’ என்ற கரோனா வைரஸ் வேகமாகப் பரவும் நிலையில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய சுகாதார சேவைகளை அளிக்கும் வகையில் மத்திய அரசு ‘ஆரோக்கியா சேது’ என்ற கைப்பேசி செயலியை உருவாக்கியுள்ளது.
சுகாதாரச் சேவைகளை, நடவடிக்கைகளை முன்கூட்டியே தெரியப்படுத்தவும், ‘கரோனா’ வைரஸ் தொடர்பான அபாயங்கள், அதனை கட்டுப்படுத்துவது குறித்த வழிமுறைகள், தொடர்புடைய ஆலோசனைகளை ‘ஆரோக்கியா சேது’ செயலி மூலம் பொதுமக்களுக்கு தெரிவிப்பது முக்கிய நோக்கமாகும்.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்கள் ஆகிய போன்களில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ‘கரோனா’ தொற்று உள்ள ஒருவருடன் நீங்கள் தொடர் கொண்டீர்களா? என்பதை சரிபார்க்க இந்த ஆப் உதவுகிறது.
இதுகுறித்து மதுரை வேளாண் அறிவியல் மைய ஒருங்கிணைப்பாளர் செல்வி ரமேஷ் கூறுகையில், ‘‘ஆரோக்கியா சேது ஆப் ஆனது, ஆங்கிலம் மற்றும் தமிழ் உள்பட 11 இந்திய மொழிகளில் கிடைக்கிறது.
இந்த ஆப்பை நிறுவிய பிறகு, விரும்பிய மொழியை தேர்ந்தெடுக்கவும். ஆரோக்கியா சேது ஆப், நீங்கள் ஆபத்தில் இருக்கிறீர்களா? இல்லையா? என்பதையும் கணிக்கிறது.
இந்த ஆப்பை பதிவு செய்யும்போது, பெயர், வயது, தொழில் மற்றும் கடந்த 30 நாட்களில் நிகழ்த்திய பயணம் பற்றிய தகவல்கள், சென்று வந்த நாடுகளின் விவரம் போன்றவைகள் கேட்கப்படுகிறது.
‘கோவிட்-19’ சார்ந்த ஆபத்தை பச்சை மற்றும் மஞ்சள் வண்ண குறியீடுகளில் காட்டுகிறது. நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று பச்சை நிறத்தில் குறிக்கப்பட்டால் கவலைப்பட ஒன்றுமில்லை. ‘தொற்று நோயை தடுக்க சமூக விலகல் மற்றும் வீட்டில் தங்குவது போன்ற வழிகாட்டுதல்களை நீங்கள் பின்பற்ற வேண்டும்.
உங்களுக்கு ஆபத்து உள்ளது’ என்று மஞ்சள் நிறத்தில் குறிப்பிட்டால் நீங்கள் ஹெல்ப் லைனை தொடர்பு கொள்ள வேண்டும் என்று அர்த்தம். இந்த ஆப் மாநிலத்தில் ஒரு ஹெல்ப் லைனை தொடர்பு கொள்ளவும் பரிந்துரைக்கும்.
மத்திய அரசு அறிமுகப்படுத்திய இந்த ஆஃப் மக்களுக்கு ‘கரோனா’ வைரஸ்நோய்(கோவிட்-19) வருவதற்கான ஆபத்தை சுய மதிப்பீடு செய்வதற்கு உதவுகிறது.
தற்போதைய உடல்நலம், வயது, கோவிட்-19, அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் அனுபவிக்கிறீர்களா என்ற கேள்விகளும் இருக்கும்.
இதன் வழியாக இந்த ‘ஆரோக்கியா சேது’ ஆப் மூலம் நீங்கள் உங்களுக்கான சுய மதிப்பீடு சோதனையை செய்து கொள்ளலாம். அதனால், விவசாயிகள், விவசாயம் சார்ந்த தொழிலில்களில் ஈடுபடுவோர் இந்த செயலியை பதவிறக்கம் செய்து அதன் பயனை பெற வேண்டும். கூகுள் ப்ளே ஸ்டோரில் சென்று (https://play.google.com/store/apps/detais?id=nic.goi.aarogyasetu) பதவிறக்கம் செய்யலாம் ’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment