Published : 11 Apr 2020 11:10 AM
Last Updated : 11 Apr 2020 11:10 AM
ஒவ்வொரு ஜன்தன் வங்கிக் கணக்கிலும் 7,500 ரூபாயை மத்திய அரசு செலுத்த வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (ஏப்.11) வெளியிட்ட அறிக்கையில், "இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிற கரோனா நோய் தொற்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவில் பரவத் தொடங்கியது. நம்மை ஒத்த மக்கள்தொகை கொண்ட அண்டை நாடான சீனாவில் ஏற்படுகிற பாதிப்பு இந்தியாவிலும் ஏற்படும் என்கிற தொலைநோக்குப் பார்வை மத்திய பாஜக அரசுக்கு இல்லாததால் 130 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியா கரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கிறது.
கடந்த ஜனவரி 30 ஆம் தேதி சீனாவில் இருந்து வந்த மாணவர் மூலமாக முதல் தொற்று ஆரம்பமானது. அதற்கு பிறகு படிப்படியாக அது பரவத்தொடங்கியது. கரோனா நோய் என்பது ஒரு கொடிய தொற்றுநோய் என்பதை உணராமல் பிரதமர் மோடி பிப்ரவரி 24 ஆம் தேதி அகமதாபாத் விளையாட்டு மைதானத்தில் லட்சக்கணக்கான மக்களைத் திரட்டி 'நமஸ்தே ட்ரம்ப்' வரவேற்பு மடலை வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது, கரோனா நோயின் அச்சம் அமெரிக்க அதிபருக்கோ, இந்தியப் பிரதமருக்கோ இல்லாததன் விளைவைத்தான் அமெரிக்க, இந்திய மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.
இந்திய விமான நிலையங்களை ஒரு மாதத்திற்கு முன்பே மூடியிருந்தால் இந்தியாவில் கரோனா நோய் நுழைந்திருக்காது. தலைநகர் டெல்லியில் மார்ச் 8 ஆம் தேதி நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் முன்கூட்டியே தடை விதித்திருந்தால் இன்றைய பாதிப்பில் பெருமளவு குறைக்கப்பட்டிருக்கும். இதற்கு மத்திய பாஜக அரசுதான் பொறுப்பே தவிர, மத்திய அரசு அனுமதியோடு மாநாடு நடத்திய தப்லீக் ஜமாத் அல்ல. கரோனா நோய்க்கு மதச்சாயம் பூசுபவர்கள் அந்த நோயை விடக் கொடியவர்கள்.
கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்காக 26 மாநிலங்களுக்கு ரூபாய் 11ஆயிரத்து 51 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறது. இந்த நிதியை மாநிலங்களுக்கு ஒதுக்குவதில் கடுமையான பாரபட்சம் பாஜக அரசால் காட்டப்பட்டிருக்கிறது. கரோனா நோயினால் இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ரூபாய் 1,611 கோடி ஒதுக்கியிருக்கிறது. இரண்டாவது இடத்தில் இருக்கும் தமிழகத்திற்கு ரூபாய் 510 கோடி ஒதுக்கியிருக்கிறது. ஆனால், குறைவான பாதிப்புள்ள உத்தர ப்பிரதேச மாநிலத்திற்கு ரூபாய் 966 கோடி, மத்தியப் பிரதேசத்திற்கு ரூபாய் 910 கோடி,
பிஹாருக்கு ரூபாய் 708 கோடி, குஜராத்துக்கு ரூபாய் 662 கோடி, ஆனால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிற கேரளாவுக்கு ரூபாய் 157 கோடி தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் பாஜக அரசின் அப்பட்டமான பாரபட்சமான போக்கைப் புரிந்துகொள்ளலாம்.
35 கோடி மக்கள்தொகை கொண்ட அமெரிக்கா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 10 சதவீதமான 2 டிரில்லியன் டாலர், அதாவது 148 லட்சம் கோடி ரூபாயை நிதியாக கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒதுக்கியிருக்கிறது. ஆனால், 130 கோடி மக்கள்தொகை கொண்ட இந்திய மக்களுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 1 சதவீத தொகையை கூட ஒதுக்குவதற்கு இதுவரை பாஜக அரசு முன்வரவில்லை. அமெரிக்காவை போல மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீத மதிப்பான ரூபாய் 20 லட்சம் கோடியை ஒதுக்கினால்தான் கரோனா நோயை எளிதாக வெல்லுவதோடு, பொருளாதார பேரழிவிலிருந்து மக்களை மீட்டெடுக்க முடியும்.
நேற்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தி நான் உள்ளிட்ட மாநில காங்கிரஸ் தலைவர்களோடு காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடியதில் சில கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். அதில் கரோனா நோய் ஒழிப்பில் முக்கிய கவனம் செலுத்த வேண்டியதில் பரிசோதனையும், தடுப்பு நடவடிக்கையும் ஆகும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
உலகத்திலேயே பரிசோதனை விகிதம் இந்தியாவில் குறைவாக இருக்கிறது. 10 லட்சம் பேரில் 120 பேருக்குத்தான் சோதனை செய்கிற வசதி இருக்கிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் கரோனா நோயில் சிக்கித் தவிக்கும் மக்களிடம் பரிவு காட்டுகிற வகையில் இலவசமாக சோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தற்போது ஒரு சோதனைக்கு ரூபாய் 4,500 வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மக்கள் மீது மத்திய பாஜக அரசுக்கு இல்லாத அக்கறையை உச்ச நீதிமன்றம் வெளிப்படுத்தியிருப்பதை மனதார வரவேற்கிறேன்.
மேலும் மக்கள் ஊரடங்கு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஒவ்வொரு ஜன்தன் வங்கிக் கணக்கிலும் 7,500 ரூபாயை மத்திய அரசு செலுத்த வேண்டும். தேசிய மாதிரி கணக்கெடுப்பு ஆணையம் இந்தியாவில் உள்ள மொத்த மக்கள்தொகையில் அமைப்புசாரா தொழிலாளர்கள் 43.7 கோடி என்று கணக்கிட்டிருக்கிறது. இதில் விவசாயத்துறையில் 24.6 கோடி, கட்டுமான தொழிலில் 4.4 கோடி மற்றும் உற்பத்தி, சேவை துறைகளில் மீதி தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.
நாடு முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 3 கோடி பேர் உள்ளனர். இவர்களுக்கு மத்திய அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்கள், நிவாரண உதவிகள் எதுவும் சென்றடைவதில்லை. இவர்களுக்கு மக்கள் ஊரடங்கு காலமான 3 மாத காலத்திற்கு உதவித்தொகையை நேரடியாக, ரொக்கமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே, மத்திய பாஜக அரசு நாட்டில் நிலவுகிற அசாதாரண சூழலில் போர்க்கால அடிப்படையில் அசாதாரண நடவடிக்கைகளை எடுப்பது மிக மிக அவசியமாகும். ஒரு பக்கம் கரோனா நோய் தடுப்பில் கவனம் செலுத்துகிற மத்திய, மாநில அரசுகள், மக்கள் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து நிற்கிற ஏழை, எளிய மக்களை பசி, பட்டினி, பஞ்சத்தில் இருந்து காப்பாற்றுகிற மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது.
இந்த சூழலில் இரட்டைக்குழல் துப்பாக்கியாக இரு முனைகளிலும் நிவாரண உதவிகளை செய்து மக்களை பேரழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன்" என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT