Published : 10 Apr 2020 09:22 PM
Last Updated : 10 Apr 2020 09:22 PM
உணவு கொடுங்கள் அல்லது கொடுக்க விடுங்கள் என்று கரூர் எம்.பி. ஜோதிமணி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று (ஏப்ரல் 10) மாலை நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 911 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள 21 நாட்கள் ஊரடங்கால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கிறார்கள்.
இந்தச் சமயத்தில் தமிழக அரசு மட்டுமின்றி அரசியல் கட்சிகள், முன்னணி நிறுவனங்கள், திரையுலகப் பிரபலங்கள் எனப் பலரும் உதவிகள் செய்து வருகிறார்கள். சாலையோரத்தில் இருப்பவர்களுக்கு உணவு அளிப்பது, தினசரித் தொழிலாளர்களுக்குச் சமைப்பதற்குப் பொருட்கள் என வழங்கி வருகிறார்கள்.
இதனிடையே இந்த மாதிரியான உணவை வழங்குவதில் கரூரில் இருந்த சிக்கல் தொடர்பாக எம்.பி. ஜோதிமணி காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
"கரூரில் முதல் நாள் 160 பாக்கெட்டுகள். 4-வதுநாள் 3,280. கரோனாவை விடக் கொடிய அரசியல். காவல், வருவாய்த்துறையை வைத்து பசித்த வயிறுகளில் அடித்து உணவு கொடுப்பதை வலுக்கட்டாயமாகத் தடுத்து நிறுத்திய பிறகே ஓய்ந்தது. உணவு கொடுங்கள் அல்லது கொடுக்க விடுங்கள். இரக்கமற்ற அரசியலுக்கு இது நேரமல்ல.
அரசியலுக்கு அப்பாற்பட்டு நாங்கள் அரசோடு நிற்கிறோம். இம்மாதிரியான கொடூரங்கள் அரசின் மீதான நல்லெண்ணத்தைக் குலைக்கும். மற்ற அமைப்புகள் தமிழ்நாடெங்கும் உணவு வழங்கும்போது கரூர் மக்கள் எதற்குப் பட்டினி கிடக்கவேண்டும்? ஒரு எம்.பி.யும், எம்எல்ஏவும் பசித்த வயிற்றுக்கு உணவிட முடியாவிட்டால் இருந்து என்ன பயன்?".
இவ்வாறு ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு நாங்கள் அரசோடு நிற்கிறோம்.இம்மாதிரியான கொடூரங்கள் அரசின்மீதான நல்லெண்ணத்தை குலைக்கும்.மற்ற அமைப்புகள் தமிழ்நாடெங்கும் உணவு வழங்கும்போது கரூர் மக்கள் எதற்கு பட்டினி கிடக்கவேண்டும்?ஒரு MP யும் MLA வும் பசித்த வயிறுக்கு உணவிட முடியாவிட்டால் இருந்தென்னபயன்?
— Jothimani (@jothims) April 10, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT