Published : 10 Apr 2020 08:12 PM
Last Updated : 10 Apr 2020 08:12 PM

கரோனா அபாயம்: கையறு நிலையில் தவிக்கும் விவசாயக் கூலிகள்!

கிராமங்களில் விவசாய வேலையை மட்டுமே நம்பி வாழும் கூலித் தொழிலாளர்களுக்கு அன்றாட வருமானமே வாழ்வாதாரமாக இருக்கிறது. கரோனா வைரஸும் ஊரடங்கும் அவர்களின் அன்றாடத்தைப் புரட்டிப் போட்டிருக்கின்றன.

தமிழகம் முழுவதுமே விவசாயக் கூலிகளாக இருப்பவர்களில் பெரும்பான்மையானோர் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள். இளைஞர்களும் பெண்களும் சிறு, பெரு நகரங்களுக்கு வேலைக்குச் சென்றுவிடுகின்றனர். ஜவுளிக் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், உணவகங்கள், கட்டிட வேலை என அவர்களின் வேலை மாறிவிடுகிறது.

இந்நிலையில் கிராமங்களிலேயே தங்களின் வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கழித்துவிட்ட விவசாயக் கூலிகள், தினக்கூலிகள் ஆகியோர் இந்தச் சூழலை எப்படிக் கையாளுகின்றனர்?

திருப்பூர் மாவட்டம், கருப்பன்வலசை பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சிவமுத்து கூறும்போது, ''நிலம் வைத்திருப்பவர்களும் மற்ற சமூகத்தினரும் ஓரளவு சமாளித்து வருகின்றனர். பட்டியலினத்தவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது. கடலை பறிப்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட சின்னச் சின்ன விவசாய வேலைகளுக்கு மட்டும் சென்று வருகின்றனர். கட்டிட வேலை, பெயிண்டிங், ஊரக வேலைவாய்ப்பு, கடைகளுக்குச் செல்வது உள்ளிட்ட பணிகள் அறவே நின்றுவிட்டன. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

10க்கு இரண்டு குடும்பங்கள் சமாளித்துக் கொள்கின்றன. மீதி 8 குடும்பங்கள் வட்டிக்கு வாங்கிப் பிழைப்பை ஓட்டுகின்றன. வருமானத்துக்கும் வழியில்லை, செலவுக்கும் வாய்ப்பு இல்லை என்ற சூழலே நிலவுகிறது'' என்கிறார்.

இதுகுறித்து அதே மாவட்டத்தில், சரவணக்கவுண்டன் வலசை பகுதியைச் சேர்ந்த விவசாயக் கூலி சிவக்குமார் கூறும்போது, ''வூட்ட வுட்டு அதிகம் வெளிய போறதில்லீங்க. மளிகைக் கடை, மருந்துக் கடைக்குதான் போறோம். நெறய வாங்குற இடத்துல, இருக்கற காசைப் பொறுத்து, கொஞ்சமா வாங்கீட்டு வந்தர்றோம். அப்படியே பொழப்பு ஓடுது.

ரேஷன் பருப்பின் தரம்
வேலைக்குப் போறமோ, இல்லியோ மூணு வேளையும் பசிக்குதுங்களே... ரேஷன் அரிசி, பருப்பு இருக்குது. ஆனா அதெல்லாம் சுமாராதான் இருக்குதுங்க. ஆனாலும் நாங்க அதைத்தான் சாப்டு ஆகோணும், வேற வழியில்ல. சில நேரம் பருப்பு ரொம்ப சுமாரா இருக்கு. ரேஷன் பருப்புல செய்யற குழம்பை சாப்பிட்டு, குழந்தைக்கு 2, 3 தடவை வெளிக்குப் போகும்'' என்று வேதனைப்படுகிறார்.

சிவமுத்து, சிவக்குமார்

பெரமியம் அரசுப்பள்ளி ஆசிரியர் மாயகிருஷ்ணன் கூறும்போது, ''8 பேர் வரை கூட்டுக் குடும்பமாக வாழ்வது எங்களின் வழக்கம். கணவன், மனைவி வேலைக்குப் போக, சிறுவர்களும் பெரியவர்களும் வீட்டில் இருப்பர். இப்போது வருமானமே இல்லாமல் எல்லோரும் இருப்பது உணவுக்கே தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. இருக்கும் காசை சிக்கனமாகச் செலவழித்து வருகிறோம்

இங்குள்ள 60 குடும்பங்களில் பணம் இல்லாதவர்களுக்கு, முடிந்தவர்கள் சேர்ந்து கடன் கொடுக்கிறோம். டாஸ்மாக் மூடப்பட்டது பெருத்த நிம்மதியாக உள்ளது'' என்கிறார்.

எப்போ முடியும், எப்போ வேலைக்குப் போவோம்?
மதுரையைச் சேர்ந்த வசந்தி கூறும்போது, ''கவர்மென்டு குடுத்த 1000 ரூபாயை வச்சு, குடும்பத்தை நடத்திட்டு இருக்கோம். எப்போ இந்தப் பிரச்சினை எல்லாம் முடியும், எப்போ வேலைக்குப் போவோம்னு இருக்குங்க என்கிறார்.

மாயகிருஷ்ணன், வசந்தி

இதற்கிடையே திருநெல்வேலியைச் சேர்ந்த இசக்கி பாண்டியின் கருத்து வேறாக உள்ளது. அவர் கூறும்போது, இங்குள்ள மக்கள் இயல்பு வாழ்க்கை வாழ்கின்றனர். குடிசை வீடோ, ஓட்டு வீடோ, மச்சு வீடோ பெரும்பாலானோருக்கு சொந்த வீடு உள்ளது. தண்ணீருக்குக் காசு கொடுக்க வேண்டியதில்லை. கேஸ் தீர்ந்துவிட்டால் கூட, அவர்கள் விறகடுப்பைப் பயன்படுத்துகின்றனர். மளிகைப் பொருட்களை மட்டும்தான் வாங்க வேண்டியுள்ளது. அன்றாடச் செலவுகளை மட்டும் பார்த்துக்கொண்டால் போதும். தேவையுள்ள சிலருக்கு உறவினர்களே கொடுத்து உதவுகின்றனர்.

விவசாயம் பொய்த்து, அறுவடை நின்றால் மட்டுமே அவர்கள் பாதிக்கப்படுவார்கள். கரோனா சூழல் பெரிதாக அவர்களைப் பாதிக்கவில்லை. இயல்பாகவே இருக்கின்றனர்'' என்கிறார் இசக்கி பாண்டி.

மற்ற பொருட்களையும் வாங்கணுமே?

கன்னியாகுமரியைச் சேர்ந்த சுபா, ''ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய், ஜீனியைக் கொடுக்கிறாங்க. ஆனால் அதையும் தாண்டி மற்ற பொருட்களையும் வாங்கணுமே? அதுக்கு எங்க போறதுண்ணு தெரியல. அரசுதான் அதுக்கு வழிசெய்யணும்'' என்கிறார்.

ஆனால், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா பகுதி விவசாயக் கூலிகள் கையறு நிலையில் இருப்பதாக வேதனை தெரிவிக்கிறார் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநிலச் செயலாளர் கே.பக்கிரிசாமி.

அவர் கூறும்போது, ''தஞ்சாவூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் விவசாயக் கூலிகள் சுமார் 12 லட்சம் பேர் இருக்கின்றனர். அவர்களுக்கு வேலைக்குப் போனால்தான் உணவு. அவர்கள் வேலை செய்யும் நில விவசாயிகளிடம் போய்க் கேட்கலாம் என்றால், அவர்களே நிதி நெருக்கடியில் உள்ளனர்.

சென்றுசேராத இலவசங்கள்

பெண் விவசாயத் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலைத் திட்டம் உதவிகரமாக இருந்தது. இப்போது அதுவும் இல்லை. அரசு அறிவித்த 1000 ரூபாய் ஓரளவுக்கு விநியோகிக்கப்பட்டுவிட்டது. எனினும் அரிசி, பருப்பு உள்ளிட்ட இலவசப் பொருட்கள் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேருக்குச் சென்று சேரவில்லை. கேட்டால் இன்னும் பொருட்கள் வரவில்லை. வந்ததும் தந்துவிடுகிறோம் என்கிறார்கள்.

பொதுவாக டெல்டா பகுதிகளில் நடவு, களையெடுப்பு என பெண்களுக்கு அதிக வேலை இருக்கும். இப்போது வேலை இல்லாமல், உணவும் கிடைக்காமல் வாடுகிறார்கள். தஞ்சாவூரில் மட்டும் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 70 ஆயிரம் ஏக்கர்களுக்குக் கோடை சாகுபடி நடக்கும். வழக்கமான விவசாயப் பிரச்சினைகளால், நிறையப் பேர் நடவைத் தள்ளிப் போட்டுவிட்டனர். இதனாலும் அவர்களின் வேலை குறைந்துவிட்டது.

அதிகமான உணவுத் தேவை

சென்னை, திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில் குறைந்த வேலை பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் அனைவரும் சொந்த ஊர் திரும்பிவிட்டனர். பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த மாணவர்களும் வீட்டில் இருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் ஒவ்வொரு குடும்பத்திலும் உணவுத் தேவை அதிகமாகியுள்ளது.

கே.பக்கிரிசாமி

வருத்தப்படும் விதமாக மளிகைப் பொருட்களின் விலையும் கணிசமாக அதிகரித்துவிட்டது. முன்பு 10 ரூபாயாக இருந்த தேங்காய் விலை, தற்போது 40 ரூபாய் ஆகிவிட்டது. ரூ.60 இருந்த பூண்டின் விலை 120 ரூபாய் ஆகிவிட்டது. மிளகாய், மல்லி என அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

கிராமங்கள் என்றாலே காய்கறிகள் அனைத்தும் கிடைக்கும் என்ற நிலையெல்லாம் அந்தக் காலத்தில்தான். இப்போது கிராமங்களிலும் காசு கொடுத்துத்தான் காய் வாங்குகின்றனர். ஒருசில இடங்களில் மட்டுமே காய்கறி சாகுபடி உள்ளது. அரசுதான் இவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்'' என்கிறார் கே.பக்கிரிசாமி.

அரசு என்ன செய்ய வேண்டும்?

கையறு நிலையில் இருக்கும் விவசாயக் கூலி உள்ளிட்ட தினக் கூலிப் பணியாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ஒரு மாதத்துக்கான ரேஷன் பொருட்களை அரசு இலவசமாக வழங்க வேண்டும். நிவாரணத் தொகையை உயர்த்தி அறிவிக்க வேண்டும். விரைவில் நிலைமையை இயல்புக்குக் கொண்டு வந்து, வாழ்வாதாரத்துக்கு வழிவகுக்க வேண்டும் என்பதே இவர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

- க.சே.ரமணி பிரபா தேவி | தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x