Published : 10 Apr 2020 07:30 PM
Last Updated : 10 Apr 2020 07:30 PM
மதுரையில் இதுவரை கரோனா வைரஸ் சமூக தொற்றாகப் பரவில்லை. இதுவரை இந்த நோய் கண்டறியப்பட்ட 10 இடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில், மேலமடை, நெல்லை வீதி, முல்லை தெரு, மருதுபாண்டியர் தெரு, கல்லூரி வீதி, தாசில்தார் நகர், விவேகானந்தர் தெரு, நரிமேடு, தாமஸ் வீதி, பிரசாத் ரோடு, பி.டி.ராஜன் தெரு, தபால்தந்தி நகர், குருநகர் உள்ளிட்ட பகுதிகளில் ‘கரோனா’ வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இப்பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் இடம்பெயருவதைத் தடுக்க தடுப்பு அமைத்தல், நவீன ட்ரோன் இயந்திரம் மூலம் கிருமி நாசினி தெளித்தல், பவர் ஸ்பிரே வாகனம் மூலம் கிருமி நாசினி தெளித்தல், கைத்தெளிப்பான் மூலம் கிருமி நாசினி தெளித்தல், வீடு வீடாக தகவல் சேகரித்தல், கபசுர குடிநீர் வழங்குதல் பணிகள் மாநகராட்சி சார்பில் நடக்கிறது.
இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் டிஜி.வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன் ஆகியோர் பார்வையிட்டனர்.
ஆட்சியர் டி.ஜி.வினய் கூறுகையில், ‘‘மதுரை மாநகர் பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 25 நபர்கள். இவர்கள் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள், மற்றும் அவர்களின் உறவினர்கள்.
மதுரை மாநகரை பொறுத்தமட்டில் கரோனா வைரஸ் சமூகத் தொற்றாக இதுவரை பரவவில்லை. மதுரை மாவட்டத்தில் மொத்தம் 10 இடங்களில்தான் கொரோனா வைரஸ் தொற்று உள்ளது.
இவற்றில் மதுரை மாநகராட்சியில் 3 இடங்களும், புறநகர் பகுதியில் 7 இடங்களும் அடங்கும். மதுரை மாநகரில் உள்ள கரோனா வைரஸ் கண்டறியப்பட்ட 10 இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டும், தனிமைப்படுத்தப்பட்டும் நகர்ப்புறங்களில் 1 கிலோ மீட்டா அளவிற்கும், கிராமப்புறங்களில் 3 கிலோ மீட்டர் அளவிற்கும் வெளியே செல்லாதவாறு பாதுகாப்புத் தடுப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியைச் சார்ந்த பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், மளிகைக் சாமான்கள் உள்ளிட்டவற்றை தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு தெருவிற்கும் வீடு வீடாகச் சென்று வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்கள் வெளியில் வராதவாறு காவல் துறையினர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT