Published : 10 Apr 2020 07:10 PM
Last Updated : 10 Apr 2020 07:10 PM
ஊரடங்கு உத்தரவால் உணவகங்கள் இல்லாத நிலையில் 15 நாட்களுக்கும் மேலாக தனக்கு உணவு வழங்கி வரும் புதுச்சேரி மாவட்ட ஆட்சியருக்கு ரஷ்ய நாட்டவர் தமிழில் நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையையொட்டி மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது. இதையடுத்து, புதுச்சேரியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீடில்லாத ஆதரவற்றோருக்கு மூன்று வேளையும் தன்னார்வலர்கள் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புதுச்சேரிக்கு ரஷ்யாவில் இருந்து சுற்றுலா வந்த வாடிம் போகஸ்ரோவ் என்பவர் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தனது நாட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியாமல் புதுச்சேரியில் சிக்கிக் கொண்டார். பின்னர், ரஷ்யத் தூதரகத்தின் வேண்டுகோளின்படி அவர் புதுச்சேரி ரயில் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
அவருக்குக் கடந்த 23-ம் தேதி முதல் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி தன்னார்வலர்கள் தினமும் 3 வேளையும் உணவு வழங்கி வருகிறார்கள். அதன்படி இன்று (ஏப் 10) வாடிம் போகஸ்ரோவுக்கு உணவு வழங்கப்பட்டது.
இதையடுத்து, தனக்குக் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக உணவளித்து வரும் மாவட்ட நிர்வாகத்துக்கு வாடிம் போகஸ்ரோவ் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், உணவகங்கள் ஏதும் இல்லாத நிலையில் மாவட்ட நிர்வாகம் வழங்கும் உணவால் தான் உயிர் வாழ்வதாக தமிழில் நன்றி தெரிவித்து உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகின்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT