Last Updated : 10 Apr, 2020 05:12 PM

 

Published : 10 Apr 2020 05:12 PM
Last Updated : 10 Apr 2020 05:12 PM

புற்றுநோயால் தவித்த மனைவி; 120 கி.மீ. தூரம் சைக்கிளிலேயே அழைத்து வந்து மருத்துவமனையில் அனுமதித்த கணவர்; புதுச்சேரியில் நெகிழ்ச்சி சம்பவம்

சைக்கிளிலேயே மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து வந்த அறிவழகன்.

புதுச்சேரி

ஊரடங்கால் பேருந்துகள் இயங்காத சூழலில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவி வலியால் துடித்ததால், அவரை கும்பகோணத்திலிருந்து சைக்கிளில் 120 கி.மீ. தூரத்தில் உள்ள ஜிப்மருக்கு கணவர் அழைத்து வந்தார். அவருக்கு 3 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது.

நாடு முழுவதும் ஊரடங்கால் மாநில எல்லைகள் தொடங்கி மாவட்ட எல்லைகளைக் கடப்பதே தற்போது சிரமம். அத்துடன் பேருந்து போக்குவரத்தும் இல்லை. இச்சூழலில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன், வயது 65. இவரது மனைவி மஞ்சுளா (வயது 60). இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். மஞ்சுளாவுக்கு நோய் முற்றிய நிலையில் அவருக்கு கீமோதெரபி சிகிச்சை கொடுக்க வேண்டும். அதனால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குச் செல்லுங்கள் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

ஊரடங்கு முடிந்த பிறகு செல்லலாம் என்று நினைத்த சூழலில், நோயுற்ற மனைவி வலியால் துடிப்பதைப் பார்த்த அறிவழகன் புதிய முடிவு எடுத்தார். தனது பழைய சைக்கிளில் மஞ்சுளாவை புதுச்சேரிக்கு அழைத்து வந்துள்ளார். இரவு முழுக்கப் பயணித்து மொத்தம் 120 கி.மீ. தொலைவைக் கடந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு, அறிவழகன் தன் மனைவியுடன் வந்தார்.

சைக்கிளிலேயே மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து வந்த அறிவழகன்

இடுப்பில் வேட்டி, துண்டுடன் தனது மனைவியை சைக்கிளில் அமர வைத்து அழைத்து வந்துள்ளார். கரோனா தொற்று காரணமாக புறநோயாளிகள் சிகிச்சை ஜிப்மரில் நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது அவர் வந்த விதம் பற்றி பாதுகாவலரிடம் சொன்னவுடன் அவர்கள் மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றனர்.

120 கி.மீ. தூரம் சைக்கிளில் வந்ததை அறிந்த மருத்துவர்கள், உடனடியாக மஞ்சுளாவை சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருவரையும் மருத்துவமனை வளாகத்தில் தங்க வைத்துப் பலரும் அவர்களுக்கு உணவு, மருந்துகள் வாங்க உதவினர். பிறகு அவர்களை ஆம்புலன்ஸில் ஊருக்கு அனுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக ஜிப்மர் தரப்பில் விசாரித்தபோது, "புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவி வலியால் துடித்தபோது சைக்கிளிலேயே 120 கி.மீ. தொலைவு வரை முதியவர் அழைத்து வந்ததை அறிந்து உடனேயே சிகிச்சை தந்தோம். 3 நாட்கள் சிகிச்சை தரப்பட்டது அதையடுத்து ஊருக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தோம். கட்டணம் வாங்கவில்லை. ஆம்புலன்ஸ் சேவை குறிப்பிட்ட தொலைவு வரை மட்டுமே தர இயலும். அவர்கள் சூழலையும் நிலையையும் அறிந்து இலவசமாகவே செய்தோம்" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x