Published : 10 Apr 2020 01:35 PM
Last Updated : 10 Apr 2020 01:35 PM

பொதுமக்களிடம் கடுமை காட்டும் காவல்துறை; புகார் அளிக்க வசதி ஏற்படுத்தக் கோரி மனு: டிஜிபிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

ஊரடங்கு உத்தரவின்போது பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொள்ளும் காவல்துறையினருக்கு எதிராகப் புகார் அளிக்க வசதி ஏற்படுத்தக் கோரிய மனு குறித்து 4 வாரங்களில் விளக்கம் அளிக்க தமிழக டிஜிபிக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடெங்கும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வெளியில் வருவதைத் தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆரம்பத்தில் கடுமை காட்டிய காவல்துறை, உயர் அதிகாரிகள் உத்தரவால் பொதுமக்களிடம் கடுமை காட்டுவதில்லை.

வாகனங்கள் பறிமுதல், வழக்கு, கைது போன்றவற்றிலும் அதிக அளவில் போடுவதில்லை. எச்சரிப்பது, சிறு சிறு நூதன தண்டனை கொடுப்பது ஆகியவை நடக்கின்றன. ஆனாலும் சில இடங்களில் போலீஸார் அத்துமீறி நடக்கின்றனர். தருமபுரியில் வாகன ஓட்டிகளின் வாகனங்களை போலீஸார் அடித்து உடைத்தனர்.

கொருக்குப்பேட்டையில் ஆட்டோ ஓட்டுநரைக் கடுமையாகத் தாக்கியதால் அவரின் இரண்டு கைகள் முறிந்ததாகப் புகார் கூறப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் அவ்வப்போது கட்டுப்படுத்தினாலும் சில இடங்களில் போலீஸார் அதை மதிக்காமல் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் வாகனங்களில் வருபவர்களிடம் கடுமையாக நடந்து கொள்கின்றனர்.

இவ்வாறு கடுமையாக நடந்து கொள்ளும் காவலர்கள் தொடர்பாக புகார் அளிக்க, தகுந்த வசதியை ஏற்படுத்தித் தர உத்தரவிடக் கோரி தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழக ஐந்தாம் ஆண்டு மாணவர் ஆப்ரீன் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காவல்துறையினருக்கு நோய்த்தொற்று பரவாமல் தடுக்கத் தேவையான பாதுகாப்பு வசதிகள் ஏதும் வழங்கப்படவில்லை என்றும், அவர்களுக்கான பாதுகாப்பு வசதியை உறுதி செய்யும்படி டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இந்தப் புகார் மனுவை விசாரித்த மனித உரிமை ஆணையத் தலைவர் துரை ஜெயச்சந்திரன், இதுகுறித்து 4 வாரங்களில் அறிக்கை அளிக்க தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x