கரோனா நிவாரண நிதி: தனது முதியோர் உதவித்தொகை ரூ.3 ஆயிரத்தை தர புதுச்சேரி சட்டப்பேரவைக்கு வந்த 85 வயது மூதாட்டி

85 வயது மூதாட்டி தையல்நாயகி.
85 வயது மூதாட்டி தையல்நாயகி.
Updated on
1 min read

கரோனா நிவாரண நிதிக்காக தனது முதியோர் உதவித்தொகை ரூ.3 ஆயிரத்தை தர புதுச்சேரி சட்டப்பேரவைக்கு வந்தார் 85 வயது மூதாட்டி தையல்நாயகி.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக செலவு செய்யும் வகையில் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தரப்பிலிருந்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்குமாறு கோரியிருந்தார்.

அதன்படி, பல்வேறு நிறுவனங்கள், மாணவர்கள் என பலரும் நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த பண உதவியை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரி கோவிந்த சாலை பகுதியைச் சேர்ந்த 85 வயதான மூதாட்டி தையல்நாயகி, கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தனக்கு வந்த முதியோர் உதவித்தொகை 3,000 ரூபாயை அளிக்க புதுச்சேரி சட்டப்பேரவைக்கு பல்வேறு தடைகளையும் தாண்டி தனது மகள், பேரனுடன் இன்று (ஏப்.10) காலையில் வந்தார்.

அவர் ரூ.3 ஆயிரத்தை தொகையாக எடுத்து வந்திருந்தார். நிவாரண நிதிக்கு பணமாகப் பெற இயலாது, காசோலையாகத்தான் தர வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, அவர் கூறுகையில், "முதியோர் உதவித்தொகை கையில் இருந்தது. கரோனா பாதிப்பை பார்த்து உதவ நினைத்து அத்தொகையை முதல்வரிடம் தர வந்தேன். காசோலையாகத்தான் தர வேண்டும் என எனக்குத் தெரியவந்தது. இன்று வங்கிகள் விடுமுறை. அதனால் காசோலையாக மாற்றி மீண்டும் திங்கள் அன்று வந்து நிவாரணத்தொகையை தருவேன்" என்று கூறி அங்கிருந்து புறப்பட்டார் தையல்நாயகி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in