Published : 10 Apr 2020 11:52 AM
Last Updated : 10 Apr 2020 11:52 AM

மிக மோசமான வறுமைக்குள் விழுவதற்கான ஆபத்து; அமைப்பு சாரா தொழிலாளர்களைக் காப்பாற்றுக; வைகோ

வைகோ: கோப்புப்படம்

சென்னை

அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலனைக் காக்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, வைகோ இன்று (ஏப்.10) வெளியிட்ட அறிக்கையில், "பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு (International Labour Organisation-ILO) உலகின் தற்போதைய பொருளாதாரச் சூழல் பற்றி ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையை இந்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியா, நைஜீரியா, பிரேசில் ஆகிய நாடுகளில்தான் முறைசாரா தொழிலாளர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐஎல்ஓ கூறி இருக்கிறது.

இந்தியாவில் முறைசாரா தொழில்களில் 90 விழுக்காடு பணிபுரியும் 40 கோடி தொழிலாளர்கள் இந்தச் சிக்கலான காலகட்டத்தில் மிக மோசமான வறுமைக்குள் விழுவதற்கான ஆபத்து இருப்பதாகவும் ஐஎல்ஓ அறிக்கை எச்சரித்துள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிக மோசமான இந்தக் காலகட்டத்தில், ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளால் பணியிடங்கள் மூடப்பட்டு இருப்பதால், உலகம் முழுவதும் இருக்கும் உழைக்கும் தொழிலாளர்களில் 81 விழுக்காடு பேர், அதாவது 5 இல் 4 பேர் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

கரோனா காரணமாக சுற்றுலா, விமானப் போக்குவரத்து, உணவகங்கள், விடுதிகள், உற்பத்தித் துறை, ஊடகம், பொழுதுபோக்கு போன்ற துறைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் இரண்டிலுமே தொழிலாளர்களும், வணிகமும் மிக மோசமான சூழலை எதிர் கொண்டிருக்கின்றனர் என்று பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பின் இயக்குநர் கய் ரய்டர் தெரிவித்து இருக்கிறார்.

வளைகுடா நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழ்கின்ற இந்தியத் தொழிலாளர்கள் நலன்களையும் பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

எனவே, கரோனா கொள்ளை நோய் தடுப்புக் காலத்தில் கோடிக்கணக்கான அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலனைக் காக்க மத்திய, மாநில அரசுகள் திட்டங்கள் வகுத்துச் செயல்படுத்த வேண்டும்" என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x